Subscribe: RSS Twitter
:
ஐரோப்பிய ஒன்றியத்தின் ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகை மீளக் கிடைக்கப்பெற்றமையானது இலங்கைக்கு கிடைத்த பெரும் வெற்றியாகுமென தெரிவித்துள்ள பிரதமர் ரணில் விக்ரமசிங்க, இதற்காக பாடுபட்ட அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்வதாக குறிப்பிட்டுள்ளார்.
இலங்கைக்கு மீண்டும் ஜீ.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகையை வழங்குவதற்கு தீர்மானித்துள்ளதாக ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்ததையடுத்து, பிரதமர் நேற்று (புதன்கிழமை) மாலை வெளியிட்ட விசேட அறிவிப்பிலேயே மேற்குறித்தவாறு குறிப்பிட்டுள்ளார்.
மக்களது உரிமைகளை பாதுகாத்து, ஜனநாயகத்தை பலப்படுத்துவதற்காக கடந்த இரண்டு வருடங்களில் அரசு முன்னெடுத்த நடவடிக்கைகளின் பிரதிபலனாக ஜீ.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகை மீளக் கிடைக்கப்பெற்றதென குறிப்பிட்ட பிரதமர், இவ் வரிச் சலுகையால் ஆடை உள்ளிட்ட உள்நாட்டு உற்பத்திப் பொருட்களை ஐரோப்பிய சந்தைகளுக்கு கூடுதலாக ஏற்றுமதி செய்யமுடியும் என்றும் இதன்மூலம் புதிய வேலைவாய்ப்புகள் உருவாகுமெனவும் மேலும் குறிப்பிட்டார்.
இலங்கையின் மனித உரிமைகள் தொடர்பான நடவடிக்கைகளில் ஜீ.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகையானது மிகவும் தாக்கம் செலுத்துகிறது. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக்காலத்தில் இலங்கையில் நிலவிய மனித உரிமை மீறல் சம்பவங்களை காரணங்காட்டி, குறித்த வரிச்சலுகையை இலங்கைக்கு வழங்குவதை ஐரோப்பிய ஒன்றியம் நிறுத்திக்கொண்டது.
இதனையடுத்து நடைபெற்ற பலசுற்று பேச்சுவார்த்தைகளின் பின்னர், புதிய அரசாங்கத்தில் ஏற்பட்ட முன்னேற்றகரமான மாற்றங்களை கோடிட்டு காட்டி, குறித்த வரிச்சலுகையை மீள இலங்கைக்கு வழங்குவதாக ஐரோப்பிய ஒன்றியம் நேற்று அறிக்கையொன்றின்மூலம் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

You must be Logged in to post comment.

© 2017 Thinacheithi | தினச்செய்தி · Subscribe: RSS Twitter · WordPress Theme designed by Speed IT net