Subscribe: RSS Twitter
:
பிரதமர் கௌரவ ரணில் விக்கிரமசிங்க அவர்கட்கு,
அன்புடையீர்,
மீண்டும் ஒரு அழிவை எமது நாடு சந்திக்கப் போகின்றது என்பது மட்டும் உறுதி.
தேசிய அரசாங்கம் என்ற போர்வையில் நமது நாடு எங்கே செல்கின்றது என்று எவருக்கும் தெரியவில்லை. என்னுடைய 60 வருடகால அரசியல் அனுபவத்தை வைத்து நான் சொல்வதை எவரும் புரிந்து கொள்வதுமில்லை. ஆனால் மீண்டும் ஒரு அழிவை எமது நாடு சந்திக்கப் போகின்றது என்பது மட்டும்; உறுதி.
விடுதலைப் புலிகள் மிகவும் பலமாக இருந்த காலத்தில் நான் தனித்து நின்று அவர்களின் சில நடவடிக்கைகளை எதிர்த்து நின்று குரல் கொடுத்தது மட்டுமன்றி இப்படித்தான் நடக்கும் என்று இடித்துரைத்தேன். அன்று என்னுடன் இணைந்து தமிழ்த் தலைவர்கள் ஒரு சிலராவது குரல் கொடுத்திருந்தால் தமிழ் மக்கள் முள்ளிவாய்க்கால் அவலத்தை சந்தித்திருக்கமாட்டார்கள். விடுதலைப் புலிகளும் அழிந்திருக்க மாட்டார்கள். ஆனால், அன்று எவரும் அதனை கண்டுகொள்ளவில்லை, பதிலாக எள்ளிநகையாடினார்கள்.
தமிழ்த் தரப்பு அரசியல் தலைவர்கள், புத்திஜீவிகள், பேராசிரியர்கள், ஆகியோரில் சிலர் மௌனம் சாதிக்க பலர் எனது கருத்தை விமர்சனம் செய்ததோடு மட்டுமல்லாமல், சில தமிழ் ஊடகங்கள் மூலமாக எனக்கு துரோகி பட்டம் சூட்டி கொலை செய்வதற்கு விடுதலைப் புலிகளின் தலைமைக்கு சிபாரிசும் செய்தார்கள். இருந்தும் நான் எனது கருத்தை வலியுறுத்தியே வந்துள்ளேன். காரணம் தமிழ் மக்களும் விடுதலைப் புலிகளும் அழிந்துவிடக் கூடாது என்பதற்காக. விடுதலைப் புலிகள் அழிந்தது ஒரு சிலருக்கு வேண்டுமானால் சந்தோசமாக இருக்கலாம் ஆனால் எனக்கு அப்படி அல்ல. நான் நாட்டு மக்கள் அனைவரையும் நேசிப்பவன். எது நடந்து விடக்கூடாது என விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கு அடிக்கடி கடிதம் எழுதினேனோ அதுதான் கடைசியில் நடந்தும் முடிந்தது.
அதேபோல்தான் இன்றும் தனித்து நின்று கூறுகின்றேன். தமிழ் மக்களின் ஏகப்பிரதிநிதிகள் தாங்கள்தான் என்று கூறும் ஒருசிலருடன் மட்டும் நீங்கள் உறவு வைத்துக்கொண்டு, ஏனையவர்களை புறம்தள்ளி, தேசிய அரசாங்கம் என்ற போர்வையில் நடத்தும் ஆட்சியில் எமது மக்களுக்கு நிலையான தீர்வு எதுவும் கிட்டப் போவதில்லை.
உங்கள் தேசிய அரசாங்கத்தில் உள்ள அமைச்சர்களே அரசில் நம்பிக்கை இழந்து பேசுகின்றார்கள். ஒரு அமைச்சர் தேசிய அரசாங்கத்தில் அமைச்சராக இருப்பதற்கு வெட்கப்படுவதாகக்கூட கூறுகின்றார். இன்னும் ஒருவர் நாட்டின் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனதான் ஆனால் மக்கள் அனைவரும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுடன்தான் என்கிறார். இந்த நிலையில் எமது மக்களுக்கு இந்த அரசு எதனையும் சாதிக்கப் போவதில்லை. காலங்காலமாக குறிப்பிட்ட ஒருசிலருடன் அவர்களை திருப்திபடுத்துவதற்காக மட்டுமே நடத்திய பேச்சுவார்த்தைகள் அனைத்தும் தோல்வியிலேயே முடிந்தன. அதுதான் வரலாறும் ஆகும். அவ்வாறான ஒரு செயலையே மீண்டும் நீங்கள் அரங்கேற்றிக் கொண்டிருக்கின்றீர்கள். இது நாட்டுக்கு மீண்டும் ஒரு அழிவையே கொண்டுவரும்.
சகல தமிழ் அமைப்புகள் மற்றும் சகல முஸ்லிம் தலைவர்கள் ஆகியோரை உள்ளடக்கி ஒரு பேச்சுவார்த்தை மூலம் விரைவில் ஒரு தீர்வை முன்வையுங்கள். புதிய அரசியல் அமைப்பு என்று கூறி காலத்தை இழுத்தடிப்பதும், மக்கள் மீது வரிச்சுமையை ஏற்றிவிட்டு, என்றுமில்லாதவாறு பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு சலுகைகளை அளிப்பதும், மாற்றத்தை ஏற்படுத்திய சகல இன மக்களையும் ஒரு ஏமாற்றும் செயலாகவே நான் கருதுகின்றேன். மீண்டும் மக்களிடையே இனக்குரோதம் வளரத் தொடங்கியுள்ளது என்பது நாட்டில் அன்றாடம் நடக்கும் நிகழ்வுகளே சான்றுகூறுகின்றன.
இவை எல்லாவற்றிற்கும், நான் ஆரம்பத்தில் இருந்தே அடிக்கடி கூறும் இந்திய முறையிலான ஒரு அரசியல் சாசனத்தை உருவாக்கி தென்னாபிரிக்க அரசியல் சாசனத்தில் உள்ளது போன்ற உரிமைகள் சட்டத்தை (Bill of Rights) உள்ளடக்கி, மீறுவோர் மீது கடுமையான சட்ட நடவடிக்கையை மேற்கொள்வதன் மூலம் ஒரு நல்ல தீர்வை வழங்கி நாட்டு மக்கள் அனைவரையும் சுபீட்சமாக வாழவைக்கலாம்.
நன்றி
அன்புடன்,
வீ. ஆனந்தசங்கரி,
செயலாளர் நாயகம்,
தமிழர் விடுதலைக் கூட்டணி

Leave a Reply

You must be Logged in to post comment.

© 2017 Thinacheithi | தினச்செய்தி · Subscribe: RSS Twitter · WordPress Theme designed by Speed IT net