Subscribe: RSS Twitter
:
சேர்.பொன்னம்பலம் அருணாச்சலம் ஓர் கல்விமான், அரசியல் வித்தகர், சிறந்த நிர்வாகி. எல்லாவற்றிற்கும் மேலாக ஓர் நாட்டுப் பற்றாளர்.அதுமாத்திரமன்றி பல்கலைக் கழகத்தின் முன்னோடி.
அவர் ஓர் சிறந்த மனிதன், மனித நேயம் மிக்கவர். அவருடைய பெருமை இந்த நாடு இருக்கும் வரை நின்று நிலைத்திருக்கும்.
அவர் செல்லாச்சி அம்மையார். பொன்னம்பலம் முதலியார் தம்பதியினரின் மூன்றாவது மகன் ஆவார். மேலும் இவர் முத்துக் குமாரசுவாமி முதலியார் மற்றும் சேர் பொன். இராமநாதனின் தம்பியும் ஆவார். அதுமட்டுமல்லாது புகழ்பூத்த சேர். முத்துக் குமாரசுவாமி முதலியாரின் மருமகனும் ஆவார்.
அருணாச்சலம் 14 செப்ரெம்பர் 1853 ஆண்டு கொழும்பில் பிறந்தார். அவர் கொழும்பு அக்கடமியில் (றோயல் கல்லூரி) கல்வி கற்றார். கல்வி கற்கின்ற காலங்களில், மகாராணியின் புலமைப்பரிசு. மற்றும் சிறந்த மாணவனுக்கான ரேனரின் பரிசினையும் வென்றார்.
கொழும்பு அக்கடமியின் அதிபர், அருணாச்சலம் பற்றிக் குறிப்பிடுகையில்….. ‘இளைஞர்களைப் பயிற்றுவிக்கும் எனது நாற்பது வருடகால அனுபவத்தில், இவ்வளவு சிறப்பான தகைமைகளைக் கொண்ட ஒருவரை நான் இதுவரை சந்திக்கவில்லை. பெருமை பூத்தவர்’ என்று குறிப்பிட்டார்.
1870 ஆம் ஆண்டு, பல்கலைக் கழகத்திற்கான புலமைப்பரிசிலை வென்றார். இலங்கை பொதுக் கல்வியின் இயக்குநரான சேர். வோல்டர் சென்டலின் சிபாரிசுடன் இலண்டன் கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்தில் கிறைஸ் கல்லூரிக்கு கல்விகற்கச் சென்றார்.
கலைகளிலும், கணிதத்திலும் சிறப்பு வாய்ந்தவராக கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் திகழ்ந்தார். அதையடுத்து கிறைஸ் கல்லூரியின் புலமைப் பரிசினையும் வென்றார்.
அவர் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும் காலத்தில், கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்த யோர்க் நகரின் பிரதானகுரு, கேம்பிறிட்ஜ் பல்கலைக்கழக பட்டதாரி மாணவர்கள் மத்தியில் சொற்பொழிவு ஆற்றும்போது, இந்தியச் சமயங்களைப் பற்றித் தரக்குறைவாகப் பேசினார். அதனைச் செவிமடுத்த அருணாச்சலம் யோர்க் நகர மதகுருவின் பேச்சிற்கு மறுப்புத் தெரிவிக்கும் விதத்தில், பிரபல பத்திரிக்கையான ‘ஸ்பெக்ரேற்றர்’ பத்திரிகைக்கு கடிதம் எழுதி அனுப்பினார். 26 டிசம்பர் 1874ஆம் ஆண்டு அது பத்திரிகையில் வெளிவந்தது.
அருணாச்சலம் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் சட்டப்படிப்பான எல்.எல்.பீ. பட்டப்படிப்பை படித்து வந்தார். அந்தப் பட்டப்படிப்பைப் படித்து, இங்கிலாந்தில் ஒரு சட்டத்தரணியாக வேண்டும் என்று அவாக் கொண்டார். ஆனால் அவ்வாறு நடக்கவில்லை.
அவரது தாய்வழி மாமனான சேர். முத்துக்குமாரசுவாமி, சிவில் சேவை திறந்த பரீட்சைக்குத் தோற்றுமாறு அவரைக் கேட்டுக் கொண்டார்.அதன்படி, சிவில் சேவை பகிரங்கப் பரீட்சைக்குத் தோற்றினார். அவரே சிவில் சேவைப் பரீட்சைக்குத் தோற்றிய முதல் இலங்கையர் ஆவார்.
அந்தப் பரீட்சையில் சிறப்பாகச் சித்தியடைந்ததை அடுத்து, சிவில் சேவையில் இலங்கையில் ஏப்ரல் 1875 ஆம் ஆண்டு சேர்ந்து கொண்டார்.முதன்முதலில், இவர் கொழும்பிலுள்ள மாவட்ட அதிபர் காரியாலயத்தில் கடமைபுரிந்தார். அதையடுத்துக் கண்டியிலுள்ள பொலிஸ் நீதிமன்றத்தில் (மஜிஸ் ரேற்) நீதிபதியாகக் கடமையாற்றினார்.
அவர் நீதிபதியாக கல்பிட்டிய, புத்தளம், மாத்தளை, அவிசாவளை, பசறை, மாத்தறை, களுத்துறை, கொழும்பு, ஆகிய இடங்களில் கடமையாற்றினார்.மேலும், மாவட்ட நீதிபதியாக, சிலாபம், கேகாலை, களுத்துறை, மட்டக்களப்பு, குருநாகல் ஆகிய இடங்களில் கடமையாற்றினார். அவருடைய சேவையின் சிறப்பினை அவதானித்த, அன்றைய பிரதம நீதியரசரான முட்பியர், 1879 ஆம் ஆண்டு அவர் ஓய்வு பெறுவதற்கு முன்னர் தேசாதிபதிக்கும், காலனித்துவச் செயலாளருக்கும், அருணாச்சலத்தின் கெட்டிக்காரத்தனத்தையும், சிறந்த முறையில் நீதிச்சேவையில் இயங்குவதையும் பாராட்டிக் கடிதம் ஒன்றை அனுப்பி வைத்தார்.
அதையடுத்து, அன்றைய தேசாதிபதி சேர். ஆதர் கோர்டன் அவரைப் பதிவாளர் நாயகமாகவும், மேல்மாகாணத்தின் பிசிக்கால் ஆகவும், 1886 ஆம் ஆண்டு நியமனம் வழங்கினார்.
அவரிலும் பார்க்க பதவியில் பல சிரேஷ்ட நீதிபதிகள் இருந்த போதிலும், அன்றைய தேசாதிபதி அருணாச்சலத்தின் திறமைகளுக்கு மதிப்பளித்து அந்தப் பதவிகளை வழங்கினார்.
அருணாச்சலம் அவர்கள், பதிவாளர் நாயகமாகப் பதவி ஏற்றதை அடுத்து, எந்தவித ஒழுங்கு முறைமைகளும் இல்லாதிருந்த பதிவாளர் நாயகம் காரியாலயத்தைச் சீர்ப்படுத்தினார். அதுமாத்திரமன்றி, பதிவாளர் நாயகம் காரியாலயம், பிசிக்கார் காரியாலயத்தையும் தனித்தனியாகப் பிரித்த, வேறு வேறு திணைக்களங்களாக மாற்றினார். பதிவாளர் நாயகம் காரியாலயத்தில் கடமை புரிகின்ற போது, அங்குள்ள லிகிதர்கள் (எழுதுனர்கள்) பக்கத்திலிருந்துஇ அவர்களுடன் சேர்ந்து வேலைகளைச் செய்து வந்தார்.
அப்பொழுது அந்த உத்தியோகத்தர்கள் படும் கஸ்டங்களை அவரால் நேரடியாக உணரக் கூடியதாக இருந்தது.அவர்களுக்கென ஒரு தர்ம நிதியத்தை உருவாக்கினார். அவ்வாறு செய்ததனால் அந்த உத்தியோகத்தர்கள் கடன் கொடுத்த முதலைகளின் கொடூரப் பிடியிலிருந்து காப்பாற்ற அவரால் முடிந்தது.சுகாதாரக் கேட்டினால் நாட்டில் இறப்புவீதம் அதிகரிப்பதை அதிர்ச்சியுடன் நோக்கி, 1895 ஆம் ஆண்டு சாவு விகிதத்தைக் கட்டுப்படுத்த நடவடிக்கைகளை மேற்கொண்டார்.அதற்காகச் சேரியில் வாழும் மக்களுக்கு, சீரான முறையில் வீடு கட்டிக் கொடுப்பதற்கும், கழிவுக் கால்வாய்க்கள் அமைப்பதற்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டார்.
அன்றைய தேசாதிபதி சேர். றெஸ்றிட்ஜ்வே 1901 ஆம் ஆண்டிற்கான குடிசன அறிக்கையைத் தயாரிக்குமாறு அருணாச்சலத்தைப் பணித்தார்.அதையடுத்து அருணாச்சலம் அவர்கள் தயாரித்த 1901 ஆம் ஆண்டிற்கான குடிசன அறிக்கை, நாட்டின் பொருளாதார, சமூக, இன, நிலைகளை மிகவும் துல்லியமாகப் பிரதிபலித்தது.
அவரது அறிக்கையில் அவர் கையாண்ட வசனநடை, அதிலுள்ள பொருள் செறிவு எல்லாம் இன்றுவரை சகலரையும் கவர்ந்து கொண்டே இருக்கின்றது.1906 ஆம் ஆண்டு சட்ட நிர்வாக சபைக்கு தேசாதிபதியினால் நியமிக்கப்பட்டார்.
அவர் அந்தக் காலத்தில் பல குழுக்களில் உறுப்பினராக இருந்து, நிறைய நிர்வாகச் சீர்திருத்த வேலைகளை வெற்றிகரமாகச் செய்து வந்தார்.மேலும் 1912 ஆம் ஆண்டு அன்றைய தேசாதிபதி சேர் ஹென்றி மக்கலம் அருணாச்சலத்தை சட்ட நிரூபண சபை உறுப்பினராகத் தெரிவு செய்தார்.
அவ்வாறு நியமிக்கப்பட்டதை அடுத்து அவர் உத்தியோகப்பற்றுள்ள பிரதிநிதியாக இருந்த போதிலும், சுதந்திரமாகத் தனது கருத்துக்களை வெளியிட்டார்.சேர் பொன்னம்பலம் அருணாச்சலம் 1913 ஆம் ஆண்டு தனது பதவியிலிருந்து ஓய்வு பெற்றார்.
அவர் சேவை செய்த காலத்தில் அவரைப் போல பிரிட்டிஸ் அரசாங்கத்திற்கு திறம்பட சேவை செய்த ஆசிய நாட்டவர் வேறு எவரும் இருக்கமாட்டார் என்ற பெருமை, அவருக்கு வந்து சேர்ந்தது.1913 ஆம் ஆண்டு ஓய்வு பெற்ற பிற்பாடு, அவர் இங்கிலாந்து சென்றார். இங்கிலாந்தில் பொன்னம்பலம் அருணாச்சலத்திற்கு சேர் பட்டம் வழங்கப்பட்டது.
அன்றைய காலத்தில் இவரது தாய் மாமனான முத்துக்குமாரசுவாமிக்கு அன்றைய விக்டோரியா மாகாராணி, அந்தப் பட்டத்தை நேரடியாக வழங்கியதைப் போல, ஐந்தாவது ஜோர்ஜ் மன்னரும் அவருக்கு பக்கிங்காம் அரண்மனையில் வைத்து சேர் பட்டம் வழங்கினார்.
அவருக்கு சேர் பட்டம் வழங்கியமையைப் பொதுமக்கள், பிரமுகர்கள், கனவான்கள் எனப் பலரும் மகிழ்ச்சியடைந்தார்கள், பாராட்டினார்கள்.பொது வாழ்க்கையிலிருந்து ஓய்வுபெற்ற பிற்பாடு, இலங்கையில் அரசியல் மாற்றங்களுக்கான நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும் என்ற அபிப்பிராயம் சேர். பொன்னம்பலம் அருணாச்சலத்தின் உள்ளத்தில் தோன்றியது. 1915 ஆம் ஆண்டில் இலங்கைத் தேசியசபை ஒன்றை அமைத்தார். அதுவே பிற்காலத்தில் இலங்கைத் தேசிய காங்கிரஸ் ஆக மாறியது.
இந்தியத் தேசிய காங்கிரஸைப் போன்று, இலங்கையின் சுதந்திரத்திற்காக இலங்கைத் தேசிய காங்கிரஸ் அமைக்கப்பட வேண்டும் என்று நீண்ட காலமாக அவர் விரும்பியிருந்தார். அந்தக் காலத்தில் சேர். பொன்னம்பலம் அருணாச்சலம் இலங்கை மக்களின் சமூக நிலையை மாற்ற வேண்டும் என்பதில் மிகவும் அக்கறை காட்டினார்.
அதன் பிரகாரம், சேர். ஜேம்ஸ் பீரிஸ் உடன் சேர்ந்து, ஜனவரி 1915 ஆம் ஆண்டு, இலங்கை சோசலிசசேவை லீக் அமைப்பை உருவாக்கினார்.இந்த சமூக சேவை லீக்கிற்கு அருணாச்சலமே தலைவராகத் தெரிவு செய்யப்பட்டார்.
இந்தச் சமூக சேவை அமைப்பின் மூலம் அவர் இரவுப் பாடசாலைகளை கொழும்பில் நடாத்தினார்.இவ்வாறு அமைக்கப்பட்ட முதல் இரவுப் பாடசாலை, மருதானையில் டீம்ஸ் றோட்டில் அமைக்கப்பட்டது.
அவர் வீதி வீதியாகச் சென்று, தொழிலாளர்களை அழைத்து, அவர்களின் முன்னேற்றத்திற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டார்.கைத்தொழில் கல்வி அங்கே வழங்கப்பட்டது. ஒரு கூட்டுறவுக் கடன் உதவிச் சங்கம் ஒன்றையும் ஆரம்பித்தார்.
கைத்தொழில், விவசாய, வர்த்தக விடயங்களில் ஈடுபாடு கொண் டிருந்தவர்களிற்கு இந்தச் சங்கம் உதவிற்று.முதன் முதலில் தொழிலாளர்களுக்கான அமைப்பிற்கு சேர். பொன்னம்பலம் அருணாச்சலம் முதல் தலைவராகத் தெரிவு செய்யப்பட்டார்.
செயலாளராக, பெரி.சுந்தரம் தெரிவு செய்யப்பட்டார். பிற்பாடு, இதே பெரி. சுந்தரம்தான் ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்தின் தொழில் அமைச்சராகப் பதவி வகித்தார்.தொழில் அமைப்பின் தலைவராக இருந்த காலத்தில், தொழிலாளர்களுக்கு ஆகக்குறைந்த அடிப்படைச் சம்பளம் சட்டப்படி நிர்ணயிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.
மேலும், ஒரு நாளில் எத்தனை மணி நேரம் வேலை செய்ய வேண்டும் என்பதெல்லாம் நிர்ணயிக்க வேண்டும் என்பதற்காக அவர் மிகவும் போராடினார்.அது மாத்திரமல்லாது, தொழி லாளர்கள் செய்துகொண்ட ஒப்பந்தங்களை மீறும்போது, அதற்காக வழங்கப்படும் தண்டனைகள், மற்றும் சிறைத் தண்டனைகள் என்பவற்றை எதிர்த்துப் போராடினார்.
அதையடுத்து, இலங்கைத் தொழிலாளர் சம்மேளனம் 1920 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது.அதுவே இந்நாட்டில் அமைக்கப்பட்ட தொழிற் சங்கத்தின் முன்னோடியாகும். அருணாச்சலம் அவர்கள் கல்வியில் நிறைய அக்கறையுடையவராக விளங்கினார்.அவர் தான், முதன் முதலில் தாய் மொழி (தமிழ் அல்லது சிங்களம்) மூலமான கல்வியின் முன்னோடியாகும்.பல்கலைக்கழகத்தின் தந்தை என இவரை அழைத்தனர்.
இலங்கைப் பல்கலைக்கழகம் என்ற உயர் கல்வி நிலையத்தை தேசாதிபதி அமைக்க முன்வர வேண்டும் என்று வற்புறுத்தினார்.அதன் ஆரம்பமாக, றோயல் கல்லூரியைப் பல்கலைக்கழகக் கல்லூரியாகத் தரமுயர்த்த வேண்டுமென அவர் கோரிக்கை வைத்தார்.
பல்கலைக்கழக விடயத்தில் இவரது மைத்துனரான சேர். முத்துக்குமார சுவாமியின் மகன் டாக்டர். ஆனந்தக்குமாரசுவாமி மற்றும் எப். எல். வூட்வாட் உடன் இணைந்து, இலங்கைப் பல்கலைக்கழகத்தை அமைக்கும் முயற்சிகளில் ஈடுபட்டார். அவர் நாட்டின் வரலாற்று விடயங்களில் அக்கறையுடையவராக இருந்தார். முதன் முதலில் இலங்கையின் வரலாற்றுக் குறிப்புக்கள் ‘ ( SKETCHES OF CEYLON HISTORY) என்ற நூலை எழுதினார்.அந்த நூல் 1906 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது.
1923 ஆம் ஆண்டு அருணாச்சலம் இலங்கைத் தமிழ் லீக் அமைப்பை உருவாக்கினார். தமிழர்களுக்கு ஒரு கலாசார சமூக அமைப்பாக இருக்க வேண்டும் என்ற நோக்கத்திற்காக இதனை உருவாக்கினார்.
1924ஆம் ஆண்டு, ‘செந்தமிழ் பரிபாலன சபை’ என்ற அமைப்பை உருவாக்கி, தமிழ் இலக்கியத்தை மேம்படுத்தல், ஆராய்ச்சி செய்தல் ஆகிய நோக்குடன் வண்ணார்பண்ணை நாவலர் சைவப்பிரகாச வித்தியாசாலையில் இதனைத் தொடக்கிவைத்தார்.மேலும், கொழும்பு பரிபாலன சபையை, சைவசமயம் பற்றிய கல்வி, அதன் செயற்பாட்டை மேம்படுத்துவதற்காக இலங்கை சைவ பரிபாலனசபை எனப் பெயர் மாற்றி, அதன் தலைவராகவும் இருந்தார்.
ஆனைக்குட்டி சாமியாரின் சமாதிக்கு மேல் முகத்துவாரத்தில் இவரும், இவரது பாரியாரும் சிவன் கோவில் ஒன்றைக் கட்டினார்கள்.ஏற்கனவே குறிப்பிட்டது போல, 1883 ஆம் ஆண்டு நமசிவாய முதலியாரின் மகளான சுவர்ணத்தைத் இவர் திருமணம் செய்து கொண்டார்.
1923 ஆம் ஆண்டு தென்னிந்தியாவிற்குத் தீர்த்த யாத்திரை சென்றிருந்தார்.அவர் மதுரையில் இருந்த போது,  09 ஜனவரி 1924 ஆம் ஆண்டு காலமானார்.இவருடைய மூத்த மகன் பத்மநாபா இலண்டனில் 1921ஆம் ஆண்டு காலமானார். இவருடைய இளைய மகனும் 1939 ஆண்டு காலமானார்.அவரது இன்னுமொரு மகனான சேர்.அருணாச்சலம் மகாதேவா யூன் 1969 ஆம் ஆண்டு காலமானார்.
திருமதி பத்மாவதி பரராஜ சிங்கம், திருமதி சிவானந்தன் தம்பையா இவர் பேராசிரியர் ரீ. நடராஜாவின் தாயாவார். ஆகி யோர்கள் இவரது மகள்களாவார்.அருணாச்சலத்தின் இறப் பிற்குப் பிற்பாடு, அவருடைய ஞாபகார்த்தமாக சிலை ஒன்று வைப்பதற்குச் சிலை அமைக்கும் குழுவிற்கு ஜேம்ஸ் பீரிஸ் தலைமை வகித்தார்.
சேர். பொன்னம்பலம் அருணாச்சலத்தின் சிலையை நாடாளுமன்ற சதுக்கத்தில் ஏப்ரல் 23. 1930 ஆம் ஆண்டு நிர்மாணித்தார்கள்.அவருடைய இறந்த நாள் நினைவாக, வருடா வருடம் அவருடைய சிலைக்கு ஆதரவாளர்களும், மற்றையவர்களும் சென்று, மாலை அணிவித்துக் கௌரவப்படுத்துகின்றனர்.
அது மாத்திரமன்றி அவரது நினைவாக, 1951 ஆம் ஆண்டு, போராதனைப் பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் தங்குவதற்கான விடுதியை ‘அருணாச்சலம் மண்டபம்’ என்று பெயரிட்டு 1951 ஆம் ஆண்டு உருவாக்கினார்கள்.
அவரது இறுதிக்கால உயிலின்படி, பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும் மாணவர்களுக்குப் புலமைப்பரிசில்கள் மற்றும் பரிசில்கள் என்பவற்றிற்குப் பணம் ஒதுக்கி வைத்திருந்தார்.
அவருடைய மகனான பத்மநாபா இளம் வயதிலேயே காலமானார்.
ஆயினும் அவர் சேகரித்து வைத்திருந்த புத்தகங்கள், எல்லாவற்றையும் ஒன்று திரட்டி, 1921ஆம் ஆண்டு இலங்கைப் பல்கலைக்கழகத்திற்கு வழங்கப்பட்டது.அதுவே இலங்கைப் பல்கலைக்கழகத்தின் நூல்நிலையத்தின் முன்னோடியாகும்.
(முற்றும்)

Leave a Reply

You must be Logged in to post comment.

© 2017 Thinacheithi | தினச்செய்தி · Subscribe: RSS Twitter · WordPress Theme designed by Speed IT net