Subscribe: RSS Twitter
:
                                                                                                         ( அங்கம் – 24)
இந்தியப் பிரதமர் இந்திராகாந்தி திட்டமிட்டது போல 1983 ஜுலை 28 ஆம் திகதி தொலைபேசி மூலம் இலங்கை ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்த்தனவுடன் தொடர்பு கொண்டார்.இலங்கை ஜனாதிபதியுடன் பேசும் போது, நாட்டில் நடைபெற்ற கலவரம் பற்றித் தனது ஆதங்கத்தை அவர் வெளியிட்டார்.
ஜுலை 21 தொடக்கம் 26 வரை நடைபெற்ற கலவரம் இந்தியா முழுவதும் பல இன மக்களாலும் இஅமைப்புக்களாலும் வன்மையாகக் கண்டிக்கப்படுகின்றது என்ற விடயத்தை இந்திராகாந்தி இலங்கை ஜனாதிபதிக்குத் தெரிவித்தார். இலங்கையிலுள்ள தமிழ் மக்களுக்கு அரசியலில் முக்கிய இடம் வழங்க வேண்டும் என்றும், தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினரைக் கொழும்புக்கு அழைத்துப் பேச்சுவார்த்தையில் ஈடுபட வைக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.
மேலும், இந்தியா, இலங்கைப் பிரச்சினை பற்றி ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிப்பதற்குத் தனது பிரதிநிதி ஒருவரை இலங்கைக்கு அனுப்பி வைத்தது.இவ்வாறு அனுப்பி வைக்கப்பட்ட இந்தியாவின் விசேட பிரதிநிதி ஜீ.பார்த்தசாரதியால் முன்வைக்கப்பட்ட ஆலோசனைகளை, முதலில் ஏற்றுக் கொண்ட இலங்கை அரசாங்கம் பின்னர் இழுத்தடித்துக் கொண்டது.

 

1984 ஜனவரி மாதம் தேசிய பாதுகாப்புக்காக ஓர் அமைச்சரை ஜனாதிபதி ஜெயவர்த்தன நியமித்தார். இந்தச் செயல் மூலம் இலங்கை அரசு பாரத்தசாரதியின் ஆலோசனைகளைப் பேச்சளவில் ஏற்றுப் பின்னர் நிராகரித்து விட்டது என்பது தெளிவாகத் தெரிய வந்தது.
இதே நேரம், இந்தியா, இலங்கையின் போக்கை மிக நுணுக்கமாக அவதானித்து வந்தது. இலங்கையின் போக்கில் மாற்றம் ஏற்படுவதை அவதானித்த இந்திராகாந்தி, ஜெயவர்த்தனவுடன் பேச்சுவார்த்தை நடாத்திய சில வாரங்களில் வேறு ஒரு பாரதூரமான முடிவினை எடுத்தார்.

 

தமிழ் நாட்டிலுள்ள சிறுமலை றோவினரின் பயிற்சி முகாமில் தமிழ் ஈழ விடுதலைப்புலிப் போராளிகள் 1984 ஆம் ஆண்டு –லிங்கம் (பிரபாகரனின் பாதுகாவலர்)மட்டக்களப்புத் தளபதி அருணா,பிரபாகரன்,திருகோணமலைத் தளபதி புழேந்திரன்,மன்னார் தளபதி விக்டர்மற்றும் புலனாய்வுப் பிரிவின் தலைவர் பொட்டு அம்மான்)
1971 ஆம் அண்டு எவ்வாறு கிழக்குப் பாகிஸ்தானில் வாழ்ந்த போராளிகளை ஒண்றிணைத்துப் பாகிஸ்தானுக்கு எதிராக ஓர் போராட்ட இராணுவத்தையும் அவர்களிற்குப் பயிற்சியும், உதவியும் செய்ததோ அதே போல் இலங்கை வாழ் தமிழ் இளைஞர்களுக்கும் இராணுவப் பயிற்சி வழங்கத் திட்டமிட்டார்.

‘றோ’ (RAW ) என்ற புலனாய்வுப் பிரிவின் மூலம் இந்தப் பயிற்சி முகாமை ஆரம்பிக்க இந்திராகாந்தி திட்டமிட்டார்.தமிழ் ஈழம் ஒன்றை அமைப்பதற்கு, இலங்கை வாழ் தமிழ் இளைஞர்களிற்கு பயிற்சியும், இராணுவ உதவிகளும் வழங்க இந்தியா முன்வந்தது.இது பிரபாகரனோ மற்றும் தமிழ்ப் போராளிகள் குழுக்களின் தலைவர்களோ எதிர்பாராத விடயம்.
இந்தச் செய்தி கிடைக்கின்ற போது, பிரபாகரன் யாழ்ப்பாணத்தில் இருந்தார். இலண்டனில் வாழ்ந்து கொண்டிருந்த அன்ரன் பாலசிங்கத்திற்குத் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு, தன்னுடன் சேர்ந்து இயங்க இந்தியா வருமாறு கேட்டுக் கொண்டார்.அதையடுத்து, அன்ரன் பாலசிங்கம் இலண்டனில் தமிழ் ஈழ விடுதலைப் புலிகளிற்குத் தேவையான நிதியைத் திரட்டுவதற்குத் தீவிரம் காட்டிக் கொண்டார்.

அதே நேரம், அன்ரன் பாலசிங்கம், அவுஸ்திரேலியா நாட்டைச் சேர்ந்த தனது மனைவி அடேலுடன் இந்தியா வந்து சேர்ந்தார்.மேலும், சென்னையில் றோ அமைப்பினர் ஏனைய தமிழ் போராளிக் குழுக்களை அழைத்துப் பயிற்சி வழங்க ஆரம்பித்து விட்டார்கள்.அதேநேரம் சென்னைக்கு வந்தால், தன்னைக் கைது செய்வார்கள் எனப் பிரபாகரன் அச்சமடைந்தார்.ஆனால், அவ்வாறு ஒன்றும் நடக்காது. பயப்படத் தேவையில்லை. என்று அன்ரன் பாலசிங்கம் பிரபாகரனுக்கு உத்தரவாதம் வழங்கினார்.
இந்தியா வந்த அன்ரன் பாலசிங்கம், சென்னை சாந்தோம் பகுதியில் இரண்டு அறை கொண்ட மாடி வீட்டை வாடகைக்கு எடுத்து மனைவியுடன் அங்கு தங்கினார்.அதையடுத்து, தமிழ் நாட்டுப் பொலிஸாரின் புலனாய்வாளர்களுடனும் மற்றும் றோவின் பிரதிகளுடனும் தொடர்புகளை உருவாக்கிக் கொண்டார்.
அவர்களுடன் நடாத்திய பேச்சுவார்த்தைகளை அடுத்து, தமிழ் ஈழ விடுதலைப் புலிகளுக்குப் பயிற்சி வழங்க றோ அமைப்பினர் சம்மதம் தெரிவித்தனர்.அதையடுத்து, இந்தியா வருமாறு பிரபாகரனிற்கு பாலசிங்கம் அழைப்பு விடுத்தார்.பாலசிங்கம் பிரபாகரனை இந்தியா வருமாறு அழைத்ததை அடுத்துப் பிரபாகரன் தனது இரண்டு தூதுவர்களை மதுரைக்கு அனுப்பி வைத்தார்.அந்தத் தூதுவர்கள், பிரபாகரன் இந்தியா வந்தால், அவரைக் கைது செய்து விடுவார்கள் என்ற பிரபாகரனின் அச்சத்தை பாலசிங்கத்திற்குத் தெரிவித்தார்கள்.
அதையடுத்து, பாலசிங்கம், இன்றைய சூழ்நிலையில் பிரபாகரனை இந்தியா கைது செய்யமாட்டாது என்று உத்தரவாதம் வழங்கும் கடிதம் ஒன்றை வந்த தூதுவர்கள் மூலம் பிரபாகரனுக்கு அனுப்பி வைத்தார்.
மேலும், இந்தச் சந்தர்ப்பத்தை தமிழ் ஈழ விடுதலைப் புலிகள் பயன்படுத்தாவிட்டால், மற்ற இயங்கங்களின் கை ஓங்கி விடும் என்ற எச்சரிக்கையையும் பாலசிங்கம் தனது கடிதத்தில் வெளியிட்டிருந்தார்.பாலசிங்கம் அனுப்பிய கடிதத்தை அடுத்து, அவரது கருத்திற்கு மதிப்பளித்து, இந்தியாவிற்குத் திரும்பிச் செல்வது எனப் பிரபாகரன் முடிவு செய்தார்.
அதேநேரம், இதே மாதிரியான கருத்தைப் பிரபாகரனுக்கு முன்பு மதுரையில் வைத்துப் பாதுகாப்பு வழங்கிய பழ.நெடுமாறன் தெரிவித்திருந்தார்.மேலும், இந்திய பொலிஸ் புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த ஒரு உத்தியோகத்தரும் றோ வழங்க முன்வந்துள்ள பயிற்சியை ஏற்றுக் கொள்ளுமாறு பிரபாகரனைக் கேட்டுக் கொண்டார்.
அதையடுத்து, இந்தியா வந்த பிரபாகரன், முன்னாள் பிரான்ஸ் நாட்டின் பகுதியாக இருந்த பாண்டிச்சேரியில் றோவின் முக்கியஸ்தர்களைச் சந்தித்தார்.இந்தச் சந்திப்பு சம்பந்தமாக, பழ.நெடுமாறன் வருமாறு கருத்துத் தெரிவித்திருந்தார்.
‘ஏன் றோ என்ற புலனாய்வுப் பிரிவினர் இலங்கை தமிழ் போராளிகளுக்கு ஆயுதமும், பயிற்சியும் வழங்குகிறார்கள்’ எனக் கேட்டதாகவும், மேலும் ‘ஏன் எங்களுக்கு பயிற்சி அளிக்கிறீர்கள்? ‘ என்று அவரைச் சந்தித்த புலனாய்வுப் பிரிவு உத்தியோகத்தரைப் பிரபாகரன் கேட்டதாகவும் பழ நெடுமாறன் தெரிவித்தார்.
அவ்வாறான ஒரு கேள்வியை எதிர்பாராத புலனாய்வுப் பிரிவினர் ஆச்சர்யமடைந்தனர் என்று குறிப்பிட்ட பழ. நெடுமாறன்  ‘எங்களை வளர்க்கவா? இந்திய அரசாங்கம் எங்களுக்கு இவ்வாறு பயிற்சி வழங்கி இலங்கை அரசை பயமுறுத்தத் திட்டம் போடுகிறீர்களா? என்று றோ அமைப்பினரிடம் பிரபாகரன் கேட்டார் என்றும் பழ. நெடுமாறன் தெரிவித்தார்.
இறுதியில் றோ பிரிவினரின் வேண்டுகோளுக்கு மதிப்பளிப்பது எனப் பிரபாகரன் முடிவெடுத்தார்.அதையடுத்து றோ புலனாய்வுப் பிரிவினர் ரீ.62 எம்.எம் வகையைச் சேர்ந்த ஜேர்மன் பிஸ்டலைப் ஒன்றைப் பிரபாகரனுக்கு அன்பளிப்பாக வழங்கினார்கள். பிஸ்டலுக்குத் தேவையான தோட்டாக்களைத் தருமாறு பிரபாகரன் அவர்களிடம் கேட்டுக் கொண்டார்.அதையடுத்து ஒரு பெட்டி நிறையத் தோட்டாக்களைப் பிரபாகரனுக்கு அவர்கள் சென்னையில் வைத்து வழங்கினார்கள்.
இந்திய அரசாங்கம் பயிற்சி வழங்க முன்வந்ததைப் பிரபாகரன் மகிழ்சியுடன் ஏற்றுக் கொண்ட போதிலும், இந்தியா அரசாங்கம் எந்தச் சந்தர்ப்பத்திலும் தன்னுடைய இயக்கத்தைக் கட்டுப்படுத்தக் கூடாது என்பதனை மிகத் தெளிவாக எடுத்துக் கூறினார்.
அதன் பின்னர் பயிற்சி வழங்குவதற்குத் தன்னுடைய போராளிகளை அனுப்பி வைத்தார்.ஆனால் அவர் அவ்வாறு பயிற்சி வழங்க அனுப்பி வைத்த போராளிகளின் உண்மையான பெயர் விபரங்களைத் தெரிவிக்கவில்லை.
செப்டெம்பர், ஒக்டோபர் 1983 ஆம் ஆண்டில் உத்தரப் பிரதேசத்தில் றோவினர் வசமிருந்த மலையடி வாரம் ஒன்றின் பயிற்சி முகாமில், தமிழ் இளைஞர்களிற்குப் பயிற்சி வழங்க றோவினர் முன்வந்தனர்.மொத்தமாக இருநூறு தமிழ் ஈழ விடுதலைப்புலிப் போராளிகளுக்குப் பயிற்சிகள் வழங்கப்பட்டன.
அந்தப் பயிற்சியை அடுத்து சென்னையில் பல இடங்களில் தமது சொந்தப் பயிற்சி முகாம்களை உருவாக்கி தனது போராளிகளுக்குப் பயிற்சி வழங்க பிரபாகரன் ஏற்பாடு செய்தார்.இவ்வாறு உருவாக்கப்பட்ட பல முகாம்களில் நூற்றுக்கணக்கான தமிழ் ஈழ விடுதலைப்புலிகள் தீவிர பயிற்சி பெற்று வெளியேறினார்கள்.பிரபாகரன் ஒரு சுயம்பு போல இயங்கினார். தானே தனக்குத் தேவையான பயிற்சியைப் பெற்றுத் திறம்பட இயங்கினார்.
எந்தக் காலத்திலும் இந்திய இராணுவம் வழங்கிய பயிற்சியை அவர் ஏற்றுக் கொள்ளவில்லை.ஆனால் தனது முன்னாள் போராட்ட வீரர்களான கிட்டு, பொன்னம்மான், சூசை, ஜெயம், மாத்தையா, குமரப்பா, பானு போன்றோர்களை இவர் பயிற்சி பெற அனுப்பி வைத்தார்.

(தொடரும்)

Leave a Reply

You must be Logged in to post comment.

© 2017 Thinacheithi | தினச்செய்தி · Subscribe: RSS Twitter · WordPress Theme designed by Speed IT net