Subscribe: RSS Twitter
:
                                                                                                                                                                                                                               ( அங்கம் 25)
இந்திய உளவுப் படையைச் சேர்ந்தவர்கள், இலங்கைத் தமிழ்ப் போராளிக் குழுக்களுக்குப் பயிற்சி அளிக்கின்ற போது, இலங்கையின் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இடங்களின் விபரங்களைச் சேகரிப்பதில் ஈடுபட்டார்கள்.
இவ்வாறு பயிற்சி அளித்தவர்கள், இலங்கையின் வீதிகள், பாலங்கள், புகையிரதப் பாதைகள், மற்றும் விமான நிலையங்கள், ஓடுபாதைகள், துறைமுகங்கள் மற்றும் கடற்கரையின் ஆழம் ஆகிய விபரங்களைப் பயிற்சி பெறுபவர்களிடம் கேட்டார்கள்.
இந்த விபரங்களையும், பயிற்சி பெறும் எல்லாப் போராளிகளின் புகைப்படங்களையும் எடுத்துத் தருமாறு கேட்டபோது அவ்வாறு செய்வதற்கு அவர்கள் மறுத்தார்கள்.இதனைப் பார்த்து இந்தியப் பயிற்சியாளர்கள் சினப்பட்டார்கள். கோபப்பட்டார்கள்.
இவ்வாறு கேள்வி கேட்டதன் காரணங்களைப் பிரபாகரனால் ஓரளவு ஊகிக்க முடிந்தது. இதனால் விளையும் ஆபத்துக்களையும் பிரபாகரனால் உணர முடிந்தது.வட இந்தியா மலையடிவாரத்தில் தமிழ் ஈழ விடுதலைப் புலிகளின் முதல் பயிற்சி முகாம் முடிவடைந்தது.அதேநேரத்தில், பிரபாகரன் தமிழ் நாட்டிலுள்ள சேலம் மாவட்டத்தில் முதன் முதலாக ஓர் இராணுவ முகாமை ஆரம்பித்தார்.

அங்கே கிட்டத்தட்ட நூற்று அறுபது வீரர்கள் இருந்தார்கள்.மேலும், தமிழ் நாட்டில் திண்டுக்கல், சேலம் மதுரை ஆகிய இடங்களில் தமிழ் ஈழ விடுதலைப் புலிகள் பயிற்சி முகாம்களை அமைத்து அறுநூற்று இருபத்து ஐந்து (625) பேர் பயிற்சி பெற்று வெளியேறினார்கள்.கெரில்லா யுத்தம் முறைகளில் எழுபத்து ஐந்து பெண் வீராங்கனைகள் பயிற்சி பெற்று வெளியேறினார்கள்.
அது மாத்திரமல்லாது, தமிழ் ஈழ விடுதலைப் புலிகளில் தெரிவு செய்யப்பட்ட போராளிகளுக்கு கமோண்டோ பயிற்சியும், பிரபாகரனுக்குத் தேவையான பாதுகாவலர்களுக்கான பயிற்சிகள் என்பனவும் வழங்கப்பட்டன.
அந்தக் காலத்தில், பிரபாகரனுக்கும், இந்திய அரசாங்கத்திற்கும் இடையே நிலவி வரும் பனிப்போரைத் தமிழ் ஈழ விடுதலைப்புலிப் போராளிகளால் புரியக்கூடியதாக இருந்தது.தமிழ் ஈழ விடுதலைப் புலிகளின் பயிற்சியாளர்கள் தாங்கள் பயிற்சி பெறும் போராளிகளின் உண்மைப் பெயர்களை உளவுப் படைக்குத் தெரிவிக்காமல் தாங்கள் பயிற்சிகளை முடித்துவிட்டோம் எனப் பெருமைப்பட்டார்கள்.

அந்தக் காலத்தில் இந்தியாவில் பயிற்சி பெற்றாலும் இந்திய உளவுப் படையினரிடமிருந்து சற்று விலகியிருக்க வேண்டும் என்ற உண்மை அவர்களுக்கு விளங்கிற்று.பயிற்சிகள் சம்பந்தப்பட்ட விபரங்களையும், தமிழ் ஈழ விடுதலைப் புலிகள் பற்றியும் அவர்கள் எதுவுமே கூற முன்வரவில்லை.
ஒருமுறை, பயிற்சியாளர்களைச் சந்தித்த தமிழ் ஈழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன், இந்திய இராணுவத்தினர் அவர்களுக்கு வழங்கிய ஆயுதங்களைப் பார்த்து, ‘இங்கே பாருங்கள். எவ்வளவு பழைய ஆயுதங்களை எங்களுக்குத் தருகிறார்கள். அவர்கள் எங்களை ஒரு மடையர்கள் என நினைத்துள்ளார்கள்’ என்று கூறினார்.
அந்தக்காலத்தில் பிரபாகரன் பத்திரிக்கைகளுக்குப் பேட்டி கொடுக்க எப்பவுமே முன்வருவதில்லை. அவர் அதனை விரும்புவதும் இல்லை. வரவேற்பதுமில்லை. தமிழ் ஈழ விடுதலைப்புலிகள் மத்தியில் சிந்தனையாளர்கள், தந்திரோபாயம் தெரிந்தவர்கள், என்றெல்லாம் கருதக்கூடியவர்கள் யாரும் இருக்கவில்லை.
ஆனால், காலப்போக்கில், அன்ரன் பாலசிங்கம் பிரபாகரனுக்கு நம்பிக்கையும், விசுவாசமும், தந்திரோபாயமும் மிக்கவராகவும், மாக்சீசவாதச் சிந்தனையாளராகவும் படிப்படியாக உருமாறிக் கொண்டு வந்தார்.
தமிழ் ஈழ விடுதலைப்புலி அமைப்பினை உருவாக்கிப் பன்னிரண்டு வருடங்களுக்குப் பிறகு பிரபாகரன் கல்கத்தாவிலிருந்து வெளிவரும் ‘சண்டே’ (SUNDAY) சஞ்சிகையின் பத்தரிகையாளரான அனித்தா பிரதாப்பிற்குப் பேட்டி கொடுத்தார்.
அந்தப் பேட்டியில் தான், பிரபாகரன் முதன் முதலில் தனது மனநிலை, இலட்சியம், கொள்கைகள் என்பவற்றை வெளியிட்டார்.மற்றப் போராட்டக் குழுத் தலைவர்களைப் போல் பிரபாகரனை அவ்வளவு எழுதில் சந்திக்க முடியாது.
அவ்வாறு சந்திக்கும் சந்தர்ப்பம் கிடைத்தால், பிரபாகரன் மிகவும் தெளிவாகவும், விபரமாகவும் தனது கருத்துக்களைக் கூறி வந்தார்.அந்தக் காலத்தில், அனித்தா பிரதாப்பிற்கு முதல் பேட்டி வழங்கும் போது, பிரபாகரனைப் பார்க்கையில், ஓர் சாமானிய மனிதன் போல் தோன்றினார்.நீல நிறச்சட்டை, சாம்பல் நிறக் காற்சட்டை போட்டிருந்தார். அவரைப் பார்க்கையில், ஒரு தமிழ் வர்த்தகரைப் போல் தோற்றமளித்தார் என அனித்தா பிரதாப் குறிப்பிட்டிருந்தார்.
தமிழ் நாட்டில் தங்கியிருந்த நான்கு வருட காலத்தில் பிரபாகரன் மொத்தமாக ஆறு பத்திரிகையாளர் மகாநாட்டை நடாத்தினார்.சில பத்திரிகை மகாநாட்டில், பிரபாகரன் சில விடயங்களை மிக மெல்லிய குரலில் அருகிலுள்ள அன்ரன் பாலசிங்கத்திற்குக் கூறுவார். அதை அவர் மிகத் தெளிவாகவும், உரக்கவும் ஆங்கிலத்தில் வெளியிடுவார்.
பாலசிங்கத்தைப் பத்திரிகைகள் ஒரு கொள்கையாளனாகச் சித்தரித்தாலும், அவர் தனது பொறுப்புக்களை எப்பவும் தட்டிக் கழித்ததே இல்லை. 1984 ஆம் ஆண்டு பிரபாகரனின் பேட்டியைத் தாங்கிக் கொண்டு ‘சண்டே’ சஞ்சிகை பத்திரிக்கைக் கடைகளில் விற்பனைக்கு வந்தது.அது அரசியல் பரபரப்பை இலங்கையிலும், இந்தியாவிலும் உருவாக்கிற்று.
அந்தப் பேட்டியில் கெரில்லா யுத்தத்தில் ஈடுபட்டவர்கள் சம்பந்தமாக பல இலட்சக்கணக்கான வாசகர்களுக்கு, இவ்வாறு போராட்டங்களில் ஈடுபடுபவர்களுக்கு என்று தனியான கருத்துக்கள் இருக்கின்றன என்ற விபரத்தை வெளியிட்டது.

கொழுக்கட்டைக் கன்னங்களும், அப்போது தான் அரும்பிக் கொண்டிருக்கும் மீசையுடனும் பார்க்கும் போது, பிரபாகரனை ஓர் போராட்ட வீரனாகக் காட்டாது, தமிழ் சினிமாப் படங்களில் வரும் ஓர் நட்சத்திர நடிகர் போன்று காட்சி கொடுத்தது. அந்த ‘சண்டே சஞ்சிகை’ படத்திற்குக் கீழே, ‘ஜே.ஆர்.ஜெயவர்தன உண்மையான ஒரு பௌத்தராக இருந்தால் நான் இங்கு துப்பாக்கி ஏந்த மாட்டேன்,’ எனக் குறிப்பிடப்பட்ட அந்தப் பேட்டி தமிழ் ஈழ விடுதலைப் புலிகளின் பிரசாரத்திற்குப் பெரிதும் பயன்படுத்தக் கூயதாக இருந்தது.
அவர்கள் ‘சண்டே’ சஞ்சிகையின் நூற்றுக்கணக்கான பிரதிகளை வாங்கி உலகம் முழுவதும் தமது பிரசாரத்திற்காக அனுப்பி வைத்தார்கள்.இலங்கை அரசாங்கமும் அந்தப் பிரபாகரனின் பேட்டி வந்த ‘சண்டே’ சஞ்சிகை பிரதியில் அதிக அக்கறை காட்டியது.
பிரபாகரன் என்ன சொன்னார் என்பதில் அக்கறை காட்டவில்லை. என்ன தோற்றத்தில் உள்ளார் எனத் தெரிந்து கொள்வதில்தான் இலங்கை அரசாங்கம் அதிக ஆர்வம் காட்டினார்கள்.ஆரம்பத்தில், பிரபாகரனின் சிறு வயதுத் தபால் முத்திரை அளவு புகைப்படத்தை வைத்து நாடு முழுவதும் அவரைத் தேடி வந்தார்கள்.
முதன் முதலாகக் கிடைத்த பிரபாகரனின் படத்தைக் கறுப்பு வெள்ளையில் அச்சிட்டு,இலங்கை பூராகவும் உள்ள பொலிஸ் நிலையங்களுக்கு அனுப்பி வைத்தார்கள்.முதன் முதலாக, இந்தப் பேட்டியில், 1983 ஆம் ஆண்டு இராணுவத்தினரைத் திருநெல்வேலியில் வைத்துத் தாக்கியதற்கான காரணம் என்ன என்பதையும் அவர் தெளிவுபடுத்தினார்.
அந்தப் பேட்டியில், இது சம்பந்தமாகக் குறிப்பிட்டுள்ளதாவது, ‘இலங்கை இராணுவ வீரர்களைத் தாக்கியது எங்கள் முக்கிய போராளியான சீலனின் மரணத்திற்கு வஞ்சம் தீர்க்கவே என்றாலும், திருநெல்வேலியில் பதின்மூன்று இராணுவ வீரர்களின் இழப்பு சிறந்த போராளியும், புரட்சியாளரும், தமிழ் ஈழ விடுதலைப்புலிப் போராளியுமான சீலுனுக்கு முன் ஈடாகாது’ எனப் பிரபாகரன் கூறினார்.
அந்தப் பேட்டியில், தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி பற்றியும், தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணித் தலைவரைப் பற்றியும் பிரபாகரன் கண்டித்திருந்தார்.அந்தக் கட்சியின் அரசியல் வாதிகளைக் காட்டமாக விமர்சித்தார். அவர்கள் தவறான நம்பிக்கைகளைத் தந்து மக்களை ஏமாற்றுகிறார்கள் என்று கூறினார்.
எப்பவும் அடக்கி ஒடுக்கப்பட்ட மக்களை விடுதலை செய்யும் எண்ணம் அவர்களுக்கு இருக்கவே இல்லை என்று பிரபாகரன் கூறினார். மக்களைக் காட்டிக் கொடுப்பவர்கள் ‘கருங்காலிகள்’ என வர்ணிக்க முடியும் எனப் பிரபாகரன் அந்தப் பேட்டியில் குறிப்பிட்டார்.
                                                                                                                                                                                                     (தொடரும் )

Leave a Reply

You must be Logged in to post comment.

© 2017 Thinacheithi | தினச்செய்தி · Subscribe: RSS Twitter · WordPress Theme designed by Speed IT net