Subscribe: RSS Twitter
:
                                                                                                                                                                                                                                (அங்கம் 26)
இந்தியாவிலிருந்து வரும் சண்டே என்ற ஆங்கில சஞ்சிகைக்கு (11-17 மார்ச் 1984) தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் அளித்த பேட்டியின் தமிழாக்கத்தை இங்கு தருகிறோம்.

பிரச்சார வெளியீட்டு வாரியம்
தமிழீழ விடுதலைப்புலிகள்

‘வே.பிரபாகரன் தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத் தலைவரும் இராணுவத் தளபதியுமாவார். இவரது வயது முப்பது. விடுதலைப்புலிகள் இயக்கம்1972ம் ஆண்டு ஒரு தலைமறைவு இயக்கமாக தோற்றம் கண்டது. 1978ம் ஆண்டு சிறிலங்கா அரசு அந்த இயக்கத்தை தடை செய்தது. சிறிலங்கா அரசு வலைவிரித்துத் தேடும் விடுதலைப் போராளிகளில் இவர் முதன்மையானவராவார்.அவரது தலைக்கு சிறிலங்கா அரசு வைத்திருக்கும் விலை பத்து லச்சம் ரூபாவுக்கும் அதிகமாகும். அவர் மிகவும் அன்பானவர், பண்பானவர் மிகவும் பலம் வாய்ந்த இயக்கத்திற்கு தலைமை வகிப்பவர். அவர் சிங்கள ஒடுக்குமுறையிலிருந்து தமிழ் மக்களை விடுதலை செய்யும் இலட்சியத்தில் உறுதிப்பாடும் தீவிரமும் மிக்கவராக விளங்கினார்.

அனிதா பிரதாப்
‘சண்டே’ சஞ்சிகையில்
கேள்வி: வழக்கமான அரசியலமைப்பிலிருந்து விலகவும்,ஒரு விடுதலை இயக்கத்தை உருவாக்கவும் உங்களைத்  தூண்டியது எது? அத்தகைய ஒரு விடுதலை இயக்கம் சட்டவிரோதமாக்கப்படும்  என்பது உங்களுக்கு தெரியும் தானே?

பதில்: இலங்கையின் சனநாயகப் பாராளுமன்ற அமைப்பு அல்லது நீங்கள் சொல்லதைப் போன்று இலங்கை வழக்கில் உள்ள அரசியல் அமைப்பு எப்பொழுதுமே பெரும்பான்மையினரின் ஆதிக்கத்தையே சிறுபான்மையினரின் மீது திணித்து வருகின்றது. இந்த அரசியல் அமைப்பானது எமது மக்களின் அடிப்படை பிரச்சனைக்கு தீர்வுகாணத் தவறிவிட்டது என்பதுடன் எமது நிலைமையை மேலும் மோசமாக்கிவிட்டது.
காலம் காலமாக அரசின் ஒடுக்குமுறை ஆட்சியானது எமது மக்களின் வாழ்வு நிலையை மிகவும் மோசமானதாகவும் துன்பகரமானதாகவும் மாற்றிவிட்டது. எமது மக்களால் நடத்தப்பட்ட சாத்வீக சனநாயக போராட்டங்கள் இராணுவத்தால் நசுக்கப்பட்டன. எமது நியாயமான கோரிக்கைகள் நிராகரிக்கப்பட்டதுடன் அடக்கு முறையானது தமிழ் மக்களின் உயிர் வாழ்க்கைக்கே ஆபத்தாக அமைந்தது.

அத்தகைய சூழ்நிலைகளே ஒரு விடுதலை இயக்கத்தை உருவாக்க என்னைத் தூண்டின. தங்களை பாதுகாத்துக் கொள்வதற்கு மட்டுமல்ல சிங்கள அடக்கு முறையிலிருந்து எங்களை முழுமையாக விடுவித்துக் கொள்ள ஆயுதப் போராட்டமே நடைமுறைச் சாத்தியமான ஒரே ஒரு முறை என நான் உணர்ந்தேன். எங்கள் இயக்கம் தடை செய்யப்படுமென்பது எனக்கு ஏற்கனவே தெரியும்.அதனால்  தான் எங்கள் இயக்கத்தை ஆரம்பத்திலிருந்தே ஒரு தலைமறைவு இயக்கமாக உருவாக்கினோம்.

கேள்வி: இலங்கைத் தமிழர்களுக்கு ஆயுதப்போராட்டமே ஒரே வழியென்று நீங்கள் தீர்க்கமான முடிவுக்கு வர நிர்ப்பந்தித்த உங்களின் தனிப்பட்ட அனுபவங்களைக் கூறுவீர்களா? கல்வி, வேலைவாய்ப்பு ஆகியவற்றில் இலங்கை அரசு காட்டிய பாரபட்சமான கொள்கையால் நீங்களோ அல்லது உங்கள் குடும்பத்தவரோ நேரடியாக பாதிக்கப்பட்டுள்ளீர்களா?

பதில்: நான் பள்ளிச் சிறுவனாக இருந்த போது 1958ஆண்டின் இனக்கலவரத்தில் நடந்த பயங்கரமான சம்பவங்கள் என் மனதில் ஆழமாக பதிந்தன. சிங்கள இன வெறியர்களால் எம் மக்கள் ஈவிரக்கம் இல்லாமல் குரூரமாகக் கொல்லப்பட்ட நெஞ்சை உலுக்கும் சம்பவங்களை நான் கேள்விப்பட்டேன். எங்கள் குடும்பத்திற்கு தெரிந்த ஒரு விதவைத்தாயை நான் சந்தித்த போது அவர் இந்த இனவெறியாட்டத்தால் தனக்கு நேர்ந்த துயரமான அனுபவத்தை என்னிடம் சொன்னார். இனக்கலவரத்தின்போது சிங்களக் காடையர்கள் கொழும்பிலிருந்த அவர் வீட்டைத் தாக்கினார்கள் தீ வைத்தார்கள். அவரது கணவரையும் குரூரமாகக் கொன்றார்கள். அவரும் அவரது பிள்ளைகளும் பலத்த எரிகாயங்களுடன் தப்பினார்கள். அவரது உடலில் இருந்த எரிகாயத் தழும்புகளை நான் பார்த்தபோது அதிர்ச்சியடைந்தேன். சிறு குழந்தைகளை கொதிக்கும் தாருக்குள் வீசிக் கொன்ற கோரச் சம்பவங்களை நான் கேள்விப்பட்டேன் அநாhதரவான அப்பாவித் தமிழர்கள் எவ்வாறெல்லாம் கொடூர தாக்குதலகளுக்கு உள்ளானார்கள்; என்பதையெல்லாம் கேட்கும்போது என் மக்கள் மீது ஆழ்ந்த அனுதாபமும், அன்பும் ஏற்றப்பட்டன.
இந்த இனவெறி அமைப்பின் பிடிக்குள்ளிருந்து எம் மக்களை மீட்டெடுக்க வேண்டும் என்ற பெரும் உந்துதல் என்னிடம் தோன்றியது. நிராயுதபாணியான தமிழர்களுக்கெதிராக ஆயுதவலிமையை பிரயோகிக்கும் இந்த அமைப்பினை ஆயுதப் போராட்டத்தின் மூலமே எதிர் கொள்ள முடியும் என நான் ஆழமாக உணர்ந்தேன்.

கேள்வி: எந்தக் கட்டத்தி;ல் நீங்கள் பாராளுமன்ற அமைப்பில் நம்பிக்கை இழந்தீர்கள்? உங்கள் நம்பிக்கையைச் சிதைத்தது எது?

பதில்: எழுபதுகளின் ஆரம்பத்தில் இளம் தலைமுறைகள் அரசியலில் நம்பிக்கையிழந்திருந்த காலத்தில்தான் நான் அரசியலில் புகுந்தேன். அடுத்தடுத்து பதவிக்கு வந்த சிங்கள அரசு எமது மக்களின் துன்ப துயரங்களை ஈவிரக்கமின்றி முற்றிலும் புறக்கணித்தவந்த காரணத்தினால் எனக்கு பாராளுமன்ற அரசியலின் மீது அவநம்பிக்கை ஏற்பட்டது.

கேள்வி: நீங்கள் விடுதலைப் புலிகள் இயக்கத்தை எவ்வாறு ஆரம்பித்தீர்கள்?

பதில்: எம் மக்களின் விடுதலைக்கு ஆயுதப் போராட்டம் தான் ஒரே வழி என்பதில் முழுமையான நம்பிக்கையுடைய புரட்சிகர இளைஞர்களின் துணையுடன்தான் விடுதலைப் புலிகள் இயக்கத்தை ஆரம்பித்தேன்.

கேள்வி: உங்களைப் ‘புலிகள்’ என்று அழைத்துக் கொள்கின்றீர்கள்?

பதில்: தமிழர்களின் அரசியல் வரலாற்றில் புலிச்சின்னமானது ஆழ்ந்து வேரூன்றி இருப்பதால், தான் எமது இயக்கத்திற்கு ‘விடுதலைப் புலிகள்’ என்று பெயரிட்டேன். புலிச்சின்னமானது தமிழ்த் தேசியத்தின் புத்தெழுச்சியை உருவாவாக்கப் படுத்துகிறது. அத்துடன் கெரில்லா யுத்த முறையையும் புலிச்சின்னம் குறித்து நிற்கின்றது.

கேள்வி: நீங்கள் விடுதலைப்புலிகள் இயக்கத்தை ஆரம்பித்தபோது உங்கள் குடும்பத்தாரும் நண்பர்களும் எவ்வாறு வரவேற்றனர்?

பதில்: விடுதலைப்புலிகள் ஆரம்பித்ததுமே நான் தலைமறைவாக இயங்கி வந்தேன். அத்துடன் எனக்கும் குடும்பத்தாருக்கும் இருந்த உறவு அறுந்து விட்டது.

கேள்வி: உங்கள் குடும்பத்தாரை கடைசியாக எப்பொழுது சந்தித்தீர்கள்? உங்கள் தலைமறைவு வாழ்க்கையை ஏற்றுக்கொண்டு விட்டார்களா?

பதில்: என் குடும்பத்தாரை சந்தித்து பதினொரு வருடங்கள் ஆகிவிட்டன. சாதாரண வாழ்க்கை நடத்தும் சாமான்யனாக அவர்கள் என்னைக் கருதுகிறார்கள் என்று நான் நினைக்கவில்லை. என்னுடைய கெரில்லாப்போராளி வாழ்க்கையை அவர்கள் ஏற்றுக்கொண்டு விட்டார்கள்.

கேள்வி: 12வருட காலப் போராட்டத்தின் பின் உங்கள் இலக்கை நெருங்கிக் கொண்டிருக்கும் கட்டத்தில் இருப்பதாக நினைக்கின்றீர்களா?

பதில்: இந்த நீண்ட போராட்டத்தின் பின் எமது இலட்சியத்தை நோக்கி விரைந்து கொண்டிருப்பதாகவே உணர்கிறேன்.ஜூலை 1983 பேரழிவுகள் தமிழ் மக்களின் சகல பிரிவினரையும் ஒரே இலட்சியத்தின்  கீழ் ஒன்றிணைத்து விட்டன. எமது இயக்கத்தின் ஆயுதப் போராட்டத்திற்கு மக்களின் பேராதரவு பெருகி வருகிறது.

கேள்வி: கடந்த 12 வருடகால அனுபவங்கள் உங்களைத் தனிநபர் என்ற முறையில் எவ்வாறு பாதித்து இருக்கின்றன?

பதில்: இந்த போராட்ட அனுபவங்கள் எனது இலட்சியத்தை ஆழமாக வலுப்படுத்தியிருக்கின்றன. எனது பார்வையை மேலும் கூர்மைப்படுத்தியிருக்கின்றன.

கேள்வி: இதுவரை உங்களுக்கு ஏற்பட்ட அனுபவங்களில் மகத்தான அனுபவம் என்று எதைக் கூறுவீர்கள்?

பதில்: ஒரு குறிப்பிட்ட அனுபவத்தை மகத்தானது என தனிமைப்படுத்திக் கூறுவது எனக்கு கடினமானது. ஒரு கெரில்லாப் போராளியின் வாழ்க்கையானது துயரமும் மகிழ்ச்சியும், விரக்தியும் கலந்த பல்வேறுபட்ட அனுபவங்களின் கலவையாகும். அவற்றுள் ஒவ்வொன்றுமே ஒவ்வொரு வகையில் மகத்தானதுதான்.

கேள்வி: விடுதலைப் போராட்டத்தில் உங்களது நீண்ட அனுபவமானது வாழ்க்கை பற்றிய உங்களது நோக்கில் மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கும். இந்த அனுபவங்கள் மூலம் உங்கள் பார்வையில் ஏற்பட்ட தாக்கங்கள் பற்றியும் உங்கள் இலட்சியத்தில் எழுந்த உறுதிப்பாடுகள் பற்றியும் கூறுவீர்களா? அத்துடன் உங்கள் அனுபவங்கள் நீங்கள் ஏற்கனவே வரித்துக் கொண்ட சில கொள்கைகள் கோட்பாடுகள் நடைமுறையில் எத்துணை பொருத்தமற்றது என்பதை உணர்த்தும் அதே வேளை வேறு சில சரியானவை தாம் என்ற கருத்தினையும் ஏற்படுத்தியிருக்கலாம் அல்லவா? அவற்றில் சிலவற்றை கூறுவீர்களா?

பதில்: நாங்கள் வரித்துக் கொண்ட ஆயுதப் புரட்சி பாதை மிகவும் சரியானது என்பதை கடந்த 12 வருட கால அனுபவங்கள் சந்தேகத்துக்கு இடமில்லாமல் எனக்கு உணர்த்தியிருக்கின்;றன. எமது ஆயுத ரீதியான போராட்ட வடிவத்தை ‘பயங்கரவாதம்’ என்று விமர்சித்த மற்ற விடுதலைக் குழுக்கள் ஒடுக்கப்பட்ட எமது மக்களின் விடுதலைக்கான ஒரே வழி ஆயுதப் போராட்டம் தான் என்பதை இப்பொழுது ஏற்றுக்கொண்டு விட்டன. நாங்கள் மேற்கொண்ட கெரில்லா யுத்த முறையானது விடுதலைப் போராட்டத்தின் வலிமை மிக்க வடிவமாக அமைந்திருந்தது. எமது வெற்றிகரமான கெரில்லாத் தாக்குதல்கள் சிங்கள ஆயுதப்படைகளை தோற்கடித்து சுதந்திரத்தை வென்றெடுக்க எம்மால் முடியும் என்ற நம்பிக்கையை எமது மக்களுக்கு ஊட்டியிருக்கிறன.

கேள்வி: உங்கள் நண்பன், தத்துவாசிரியன், வழிகாட்டி யார்?

பதில்: இயற்கை எனது நண்பன். வாழ்க்கை எனது தத்துவாசிரியன். வரலாறு எனது வழிகாட்டி.

கேள்வி: இலங்கை அரசாங்கத்தால் தேடப்படுபவர்களில் முதன்மையானவராக இருப்பது குறித்து என்ன நினைக்கிறீர்கள்?

பதில்:’பிரிட்டிஷ் அரசாங்கம் யாரைப் ‘பயங்கரவாதி’ என்று சொல்கிறதோ அவனே உண்மையான ஐரிஸ் தேசியப் போராளி’ என்று ஐரிஸ் தலைவர் ஒருவர் குறிப்பிட்டார். அது போல இலங்கை அரசு என்னைத்  தேடப்படுபவர்களில்  முதன்மையாகக் கருதினால் அது நான் உண்மையான தமிழ்த் தேசியப் போராளி என்பதையே உணர்த்துகிறது. அவ்வாறு தேடப்படும் நபராக இருப்பதில் பெருமைப்படுகிறேன்.
(தொடரும்…)

Leave a Reply

You must be Logged in to post comment.

© 2017 Thinacheithi | தினச்செய்தி · Subscribe: RSS Twitter · WordPress Theme designed by Speed IT net