Subscribe: RSS Twitter
:editor
10/3/2017

 

மக்கள் மக்களுடன் நேரடித்  தொடர்பு

அந்தக் கால கட்டத்தில் தான், எனக்கும் சுதந்திரக் கட்சியில் முக்கிய பிரமுகராக கருதப்பட்ட திரு.பீலிக்ஸ் டயஸ் பண்டாரநாயக்காவுக்குமிடையில் தொடர்புகள் நிறைய ஏற்பட்டன.
திரு.பீலிக்ஸ் டயஸ் பண்டாரநாயக்கா திருமதி. ஸ்ரீமா பண்டாரநாயக்காவின் ஆலோசகராக இருந்து வந்தார். அது மாத்திரமின்றி,அவர் நீதி அமைச்ச ராகவும், அத்தோடு உள்ளுராட்சி, மற்றும் உள்நாட்டு விவகார அமைச்சராகவும் இருந்தார்.அவரது மனைவியார் திருமதி.லக்ஷ்சுமி அவரது அந்தரங்க செயலாளராக இருந்தார்.
அன்றைய காலத்தில், திரு.பீலிக்ஸ் டயஸ் பண்டாரநாயக் காவை அனேகமானோர் தவறாக எடைபோட்டனர். அவரை கோபக்காரன் என்றும், அவரோடு எப்பவுமே தொடர்புகள் கொள்ள முடியாது, மிகவும் கரார்பேர்வழி என்றெல்லாம் வர்ணித்தார்கள். ஆனால் என்னைப் பொறுத்தவரை, அவர் மிகவும் எளிமையானவராகவும் நல்ல குணங்களை உடையவராகவும் இருந்தார். அன்புடன் பழகினார்.
ஒரு முறை வியாங்கொடையில் நடைபெறவிருந்த மாதர்களுக்கான ஓர் பயிற்சிப் பட்டறைக்கு என்னையும் வருமாறு பிரதமர் காரியாலயத்திலிருந்து அழைப்பு வந்தது. அந்த அழைப்பை ஏற்று, அந்தப் பயிற்சிப் பட்டறைக்குச் சென்றேன்.
பெண்கள் சம்பந்தப்பட்ட அந்தப் பயிற்சிப் பட்டறைக்கு பிரதமரும் வந்திருந்தார். அந்தப் பயிற்சிப் பட்டறையில் பங்குபற்றிய பெண்கள், அத்தனகல்லை தேர்தல் தொகுதியைச் சேர்ந்தவர்கள். அந்தக் நிகழ்ச்சிக்கு திரு.பீலிக்ஸ் டயஸ் பண்டாரநாயக்காவும், அவரது மனைவி திருமதி. லஷ்மியும் வந்திருந்தார்கள்;.
அந்தக் கூட்டத்திலே, என்னோடு கணவனும், மனை வியும் நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்தார்கள். தமிழ் -சிங்கள உறவு பற்றி நாங்கள் நிறையப் பேசினோம்.
அவ்வாறு பேசிக் கொண்டிருக்கும் போது, என்னோடு பேசுவதினால்; தங்களுக்கு தமிழர்கள் பற்றிய விடயங்களை ஓரளவு புரியக்கூடியதாக இருப்பதாக திருமதி.லக்சுமியும், அவரது கணவரும் கூறினார்கள்.
அவர்களுக்கு நான் உடுப்பிட்டி தொகுதிக்கு கட்சியின் அமைப்பாளராக இருக்கின்றேன் என்ற விடயமும் தெரியும். பேச்சுவாக்கில் தமிழ், சிங்கள நல்லுறவை வளர்ப்பதற்கு ஏன் ஏதாவது முயற்சி எடுக்க முன்வரக் கூடாது என்று அமைச்சர் திரு.பீலிக்ஸ் டயஸ் பண்டார நாயக்கா என்னிடம் கேட்டார்.
நல்ல விடயம்தான். அதை எப்படி செய்யலாம் என்று ஆராய்ந்தோம். இறுதியில் மக்களை நேரடியாக தொடர்பு கொள்ளும் முறையிலான ஒரு திட்டத்தை நாங்கள் ஏன் செய்ய முன்வரக்கூடாது என்று ஆலோசித்து முடிவு செய்தோம்.
எமது ஆலோசனையை அடுத்து, உடுப்பிட்டி தொகுதியி லிருந்து ஆகக் குறைந்தது 25 ஆண், பெண்கள் அடங்கிய கோஷ்டி ஒன்றை டோம்பே (Dompe) தொகுதிக்கு அனுப்பி வைப்பது என்றும், அவ்வாறு செல்பவர்களை டோம்பேயில் வைத்து அமைச்சர் திரு.பீலிக்ஸ் டயஸ் பண்டரநாயக்காவும், அவரது மனைவியாரும் வரவேற்பது என்றும் முடிவு செய்தோம்.
மேலும், டோம்பே போகும் உடுப்பிட்டியைச் சேர்ந்த ஒவ்வொருவரும், டோம்பேயில் உள்ள சிங்கள குடும்பங் களின் விருந்தினராக தங்குவது என்றும், அவ்வாறு விருந்தினராக ஏற்றுக்கொண்ட குடும்பத்தினர்,உடுப்பிட்டி தமிழ்க் குடும்பத்தைச் சேர்ந்தவர்களுக்கு, அவர்களது வாழ்க்கைமுறை, கலாச்சாரம், பண்பாடு போன்றவை பற்றி விளக்கம் அளிக்க வேண்டும் என்றும், தங்களுடன் தங்க வரும் தமிழர்களை, தங்களது பிள்ளைகள் படிக்கும் பாடசாலைகளுக்கு அழைத்துச் செல்ல வேண்டும், சந்தைக்குச் செல்லும் போது அவர்களையும் கூட்டிச் செல்ல வேண்டும், என்றெல்லாம் முடிவு செய்தோம். அது மாத்திரம் இல்லாமல், அங்கு தங்க வைக்கும் குடும்பத் தினரை, தாம் செல்லும் பௌத்த கோயில் நிகழ்ச்சிகள், கல்யாணம், கருமாதி போன்ற நிகழ்வுகளுக்கும் அழைத்துச் செல்ல வேண்டும் என்றும் கூறியிருந்தோம்.
உடுப்பிட்டியில் இருந்து சென்ற தமிழர்கள் டோம்பேயில் உள்ள சிங்களக் குடும்பத்தினருடன் மூன்று கிழமை தங்குவது என்றும் முடிவு ஆயிற்று. மேலும் ஒவ்வொரு கிழமையும் முடிந்த பின்னர், டோம்பே சென்ற தமிழர்களும் அவர்கள் தங்கியிருந்த சிங்களக் குடும்பங்களும் கூடிக் கலந்துரையாடுவது என்றும், அங்குள்ள பாடசாலை அதிபர் கள்;, ஆசிரியர்கள், விவசாயிகள், சிறு வியாபாரிகள், கிராம புத்த கோயில்களில் உள்ள பிக்குகள்,(பௌத்த மதகுருமார்கள்) அரச ஊழியர்கள் ஆகியோரையும், இம்மாதிரியாக கிழமைக்கு கிழமை சந்தித்துக் கலந்துரையாடுவது என்றும் முடிவு செய்தோம்.
கிழமைக்கு கிழமை நடந்த கலந்துரையாடலில், அமைச்சர். திரு.பீலிக்ஸ் டயஸ். பண்டாரநாயக்காவும், அவ ரது மனைவியும் தவறாது கலந்து கொண்டார்கள்.
இந்த கலந்துரையாடல்கள், டோம்பேயைப் பொறுத்தவரை தமிழர்களை புரிந்து கொள்ள ஒரு நல்ல சந்தர்ப்பமாக அமைந்தது. உடுப்பிட்டி தமிழர்கள், டோம்பே சென்றதை அடுத்து, டோம்பே நல்லெண்ணத் தூதுவர்கள் 25 பேர்; மறுமாதம் உடுப்பிட்டிக்கு வந்தார்கள்.
கட்சியின் அமைப்பாளர் என்ற முறையில், அவர்களை நான் வரவேற்றேன். தமிழ் குடும்பங்கள் அவர்களை தங்கள் தங்கள் வீடுகளுக்கு அழைத்துச் சென்று தங்க வைத்தார்கள்.
டோம்பேயிலிருந்து வந்த நல்லெண்ணத் தூதுவர்களை அவர்களின் பிள்ளைகள் படிக்கும் பாடசாலைகளுக்கு, சந்தைக்கு, கடைகண்ணி, கோயில்களுக்கு எல்லாம் அழைத்துச் சென்றார்கள். அவர்களின் கேள்விகளுக்கு எல்லாம் விளக்கம் கொடுத்தார்கள்.
ஒவ்வொரு கிழமையும் அவர்களை நான் சந்தித்து, அவர் களுடன் கலந்துரையாடினேன். அவர்களும் தங்கள், தங்கள் அனுபவங்களை, ஆர்வத்துடன் எடுத்துக் கூறு வார்கள். மூன்றாவது கிழமை கூட்;டத்தை ஒழுங்கு செய்து பெரிய பாடசாலை மண்டபத்தினில்; நடத்துவேன். அவர்களும் சிங்கள மக்கள், தமிழர்களை முன்பு எப்படி தவறாகப் புரிந்து கொண்டார்கள். உடுப்பிட்டிக்கு வந்து, அங்குள்ளவர்களுடன் பழகிய பின்னர்தான், தமிழர்களைப் பற்றி என்ன எல்லாம் நினைக்கின்றார்கள், என்று கூறுவார்கள்.
அந்தத் திட்டம், தமிழ்-சிங்கள மக்களுக்கு இடையில் நல்லு றவை உருவாக்க சிறந்த திட்டம் என்று நானும் அமைச்சர் திரு.பீலிக்ஸ் டயஸ் பண்டாரநாயக்காவும் தெளிவாக உணர்ந்து கொண்டோம்.
‘மக்களுடன் மக்களின் தொடர்பு’G’ (People to People Contact) நீண்ட காலமாக நல்ல முறையில் நடை பெற்றது. கிட்டத்திட்ட இருபதுக்கு மேற்பட்ட உடுப்பிட்டி நல்லெண்ண தூதுகோஷ்யினர் ‘டோம்பே’ போயிருப் பார்கள். அதே அளவு தூது கோஷ்டியினர் டோம்பேயில் இருந்து உடுப்பிட்டிக்கும் வந்திருப்பார்கள்.
இவ்வாறு மக்களுக்கிடையில் ஏற்பட்ட உறவு நீண்ட காலமாக நிலைத்திருந்தது. பின்னர் ஆயுதப் போராட்டம் தலைதூக்கத் தொடங்கியதையடுத்து, அந்த உறவுகள் படிப்படியாக, பலவிதமான நிர்ப்பந்தங்கள் காரணமாக முடிவுக்கு வந்தது.
நானும் அமைச்சர் திரு.பீலிக்ஸ் டயஸ் பண்டாரநாயக்கவும் உருவாக்கி செய்துவந்த, ‘மக்களுடன் மக்கள் தொடர்பு’ திட்டத்தை, மீண்டும் அமுல்ப்படுத்தினால், இனங்களுக் கிடையிலான நல்லுறவைக் கட்டி வளர்க்கலாம் என்று என்னால் திட்டவட்டமாக கூற முடியும்.
அண்மைக்காலத்தில், இது சம்பந்தமாக நானும், கொழும்பு பல்கலைக்கழகத்தின் பொருளாதாரத் துறைக்குப் பொறுப்பாளரான
(Dean of the faculty of Economics)பேராசிரியர் வண.கலாநிதிதிரு.விமலரத்தின தேரரும், சில நாட்கள் தொடர்ந்து பேசினோம். இந்துக் கோயில்களுக்கும், பௌத்த விகாரைகளுக்குமிடையில், தொடர்புகளை ஏற்படுத்தி, இந்த ஆலயங்கள் மூலமாக மக்களுக்கு இடையில் தொடர்புகளை ஏற்படுத்துவது என்று முடிவு செய்தோம். இந்த விடயம் சம்பந்தமாக நானும், தேரரும், பேராதனை பல்கலைக்கழகத்தின் சமூகவியல் துறையின்; சிரேஷ்ட விரிவுரையாளருமான திரு.நந்தன விஜயசிங்கவும், தமிழ்த் தேசிய கூட்டணியின் தலைவர் திரு.இரா.சம்பந்தனை அவரது கொழும்பு இல்லத்தில் சந்தித்து பேசினோம். விரைவில் இனங்களுக்கு இடையிலான நல்லுறவை வளர்க்கும் இந்தத் திட்டத்தினை அமுல்படுத்துவோம் என்று என்னால் இங்கே துணிவுடன் கூறிக்கொள்ள முடியும்.

நான்காவது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு

 

இந்தச் சந்தர்ப்பத்தில், 1974ம் ஆண்டு ஜனவரி மாதம், 3ம் திகதி தொடக்கம், 9ம் திகதி வரை யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற உலகத் தமிழ் ஆராய்ச்சி மகாநாடு பற்றிக் குறிப்பிட வேண்டியது அவசியமாகின்றது.
யாழ்ப்பாணத்தில் இந்த மகாநாட்டை நடாத்தியவர்களின் ஆர்வக்கோளாறு காரணமாக, இறுதியில் ஒன்பது உயிர்களை இழக்க நேர்ந்தது. மக்களின் உடமைகள் நாசமாக்கப்பட்டன. ஐம்பது அப்பாவிகள் காயங்களுக்கு ஆளானார்கள்.
முதல் உலகத் தமிழ் ஆராய்ச்சி மகாநாடு, 1966ம் ஆண்டில் மலேசியாவின் தலைநகரான கோலாலம்பூரில் நடைபெற்றது. அந்த மகாநாட்டை அன்றைய மலேசியா பிரதமர் துங்கு அப்துல் ரஹ்மான் திறந்து வைத்து தொடக்க உரையை நிகழ்த்தினார்.
இரண்டாவது மகாநாடு மதராஸில் (சென்னையில்) நடை பெற்றது. அன்றைய இந்திய ஜனாதிபதி சஹீர் உசைன்,மகாநாட்டை ஆரம்பித்து வைத்தார். மூன்றாவது மகாநாடு பாரிசில் நடைபெற்றது. அந்த மகாநாட்டில் தான் நான்காவது மகாநாட்டை ஸ்ரீலங்காவில் வைப்பது என்று முடிவாகிற்று.
நான்காவது உலகத் தமிழ் ஆராய்ச்சி மகாநாட்டை யாழ்ப்பாணத்தில் வைப்பது என்று மகாநாட்டு அமைப்பாளர்கள் முடிவு செய்தார்கள். ஆனால் திருமதி. ஸ்ரீமா பண்டாரநாயக்கா தலைமையிலான அரசு அந்த மகாநாட்டை கொழும்பில் வைக்குமாறு கேட்டுக் கொண்டது. சகல உதவிகளும், வசதிகளும் செய்து கொடுப்பதாகவும் உறுதி அளித்தது. ஆனால், மகாநாட்டு அமைப்பாளர்கள்; கொழும்பில் வைப்பதற்கு மறுத்துவிட்டார்கள்.
எனவே நான்காவது உலகத் தமிழ் ஆராய்ச்சி மகாநாடு, ஜனவரி 3ஆம் திகதி தொடக்கம் 9ம் திகதி வரை யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது. 9ஆம் திகதி மாகாநாடு உத்தியோக பூர்வமாக நிறைவு அடைந்தது.
நிறைவடைந்த அந்த மகாநாட்டை ஒட்டி, கலாச்சார நிகழ்வுகளில் பங்குபற்றியவர்களுக்கு, பரிசில்கள் வழங்குவது, என்று மகாநாட்டு அமைப்பாளர்கள். முடிவு செய்து, ஜனவரி 10ஆம் திகதி ஒரு பொதுக்கூட்டத்தை நடாத்துவது என்றும் தீர்மானித்தனர். அவ்வாறே பொதுக்கூட்டம் ஒன்றை நடாத்தினார்கள்.
ஆரம்பத்தில் அந்த பொதுக்கூட்டத்தை யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தின் உள்ளரங்கில் நடாத்தினார்கள்.
அக்கூட்டத்திற்கு ஆயிரக்கணக்கான மக்கள்; வந்திருந்தார்கள். கூட்டத்தை வீரசிங்கம் மண்டபத்திற்குள் தொடர்ந்து நடாத்துவது இயலாத காரியமாக இருந்தது. எனவே கூட்டத்தை வீரசிங்கம் மண்டபத்தின் முன் புறத்தில் நடாத்துவது என்று தீர்மானித்து கூட்ட மேடையை மாற்றியமைத்தார்கள்.
அவர்கள் அமைத்த மேடை,உயர் சக்திவாய்ந்த மின்சாரக் கம்பிகள் கொண்ட மின்கம்பங்களுக்கு கீழே அமைக்கப் பட்டது. கூட்டத்தில் கிட்டத்தட்ட பத்தாயிரத்திற்கு மேற்பட்ட மக்கள் பங்குபற்றினார்கள். வீரசிங்கம் மண்டபத்திற்கு வெளியே, வீதியை அடுத்துள்ள முற்றவெளியிலும் சனக்கூட்டம் நிரம்பி வழிந்தது.
அப்பொழுது மேடையில் இந்தியாவிலிருந்து கூட்டத்திற்கு வந்த பேராசிரியர்; பேசிக்கொண்டிருந்தார்.
அந்த நேரத்தில், உதவி பொலிஸ் அத்தியட்சகர் திரு.எஸ்.கே.சந்திரசேகரா பொலிஸ் டிரக் வண்டியில், 30 கலகம் அடக்கும் பொலிசாருடன் அந்தப் பக்கம் ரோந்து வந்தார்.
பொலிசாரைக் கண்ட கூட்டத்தில் இருந்த சில விஷமிகள், பொலிஸாரின்; வண்டியை நோக்கி கற்களை வீசினர். கல்வீச்சில் டிரக் வண்டிக்குள் இருந்த ஒரு சில பொலிசார் காயமடைந்தனர்.
ஆத்திரமடைந்த பொலிசார், கூட்டத்தை கலைக்கும் நோக் கத்துடன் வானை நோக்கிச் சுட்டனர். உண்மையான துப்பாக்கி;க் குண்டுகளால் சுட்டதால்உ; (Live ammunition) யர்சக்தி மின்சார வயரில் துப்பாக்கி;க் குண்டு பட்டு, வயர் அறுந்து விழுந்தது.
மின்சாரம் ஓடிக் கொண்டிருந்த வயர், மக்கள் கூட்டத் திற்குள் விழுந்ததை அடுத்து, மொத்தமாக ஒன்பது பேர் மின்சாரம் தாக்கி,சுருண்டு,விழுந்து, இறந்தார்கள்.
உலகத் தமிழ் ஆராய்ச்சி மகாநாட்டின் இறுதிநாள் கூட்டம் பார்க்க வந்தவர்களில், ஒன்பது அப்பாவித் தமிழர்களின் இறப்பு, மிகுந்த கவலையையும், அதிர்ச்சியையும் ஏற்படுத் தியது.
இறப்புக்களை அடுத்து, அந்த மரண விசாரணை நடைபெற்றது. யாழ்ப்பாண மஜிஸ்திரேட் (நீதவான்) கே.பாலகிட்டினரால் விசாரணைகள் செய்யப்பட்டு, நடைபெற்ற கூட்டத்திற்கு ஒளி வழங்கிய லைட் என்ஜின் உரிமையாளர் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தீர்ப்பு வழங்கப்பட்டது.
யாழ்ப்பாண நீதிவானின் தீர்ப்பில் திருப்தி அடையாமல், யாழ்ப்பாண பிரசைகள் குழு, தனிப்பட்ட முறையில் ஓர் விசாரணையை தொடர்ந்தது. ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதிகளான திரு.ஓ.எல்.டி.கிறஸ்டர், மற்றும் திரு.வி.மாணிக்கவாசகர், முன்னாள் ஆயர் வண.சபாபதி குலேந்;திரன் ஆகிய மூவர் அடங்கிய விசாரணைக் குழு விசாரித்தது.
விசாரணை 1974 ஆம் ஆண்டு யூன் 10ஆம் திகதி, ஆரம்பமாகியது. விசாரணை அறிக்கை மார்ச் மாதம் 1975ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. அந்த விசாரணை அறிக்கை, கலவரத்திற்கும், இறப்புக்களுக்கும், பொலிசார் தான் காரணம் என்று தீர்ப்பு வழங்கிற்று.
-தினச்செய்தி-

Leave a Reply

You must be Logged in to post comment.

© 2017 Thinacheithi | தினச்செய்தி · Subscribe: RSS Twitter · WordPress Theme designed by Speed IT net