Subscribe: RSS Twitter
:editor
22/3/2017

வடக்கின் அரசியல் அநாதைகள்

உள்நாட்டு யுத்தம் ஓய்ந்த பின்னர், சமாதானம் நாட்டில் நிலவுகின்றது என்று எடுத்துக்கொண்டாலும், தமிழர்கள் இரு குழுக்களாகப் பிளவுபட்டிருப்பதைக் காணக்கூடியதாக இருக்கின்றது. ஒரு குழு நாட்டைத் துண்டாடும் தமிழ்த் தேசியத்தில் அசையாத நம்பிக்கை வைத்திருக்க, இன்னொரு குழுவோ தன் தாய்நாடு ஸ்ரீலங்கா என்று சொல்லிக் கொண்டு தேசியத்திலேயே ஊறிப்போய் கிடக்கின்றது
இந்த நாட்டுப்பற்று மிக்க தேசியத்தில் ஊறிப்போன குழு, அரசியல் அநாதையாக இருப்பதே இன்றைய யதார்த்தம்.
இப்படியாக வாழ்ந்து கொண்டிருக்கின்ற நூற்றுக்கணக் கானவர்கள், தங்கள் தலைகளை நிமிர்த்தி கௌரவமாக தமிழ்த் தேசியவாதிகளோடு வாழ முடியாது திணறு கிறார்கள்.
இன்னும் அறிவுக்கு எட்டாத ஏதோ காரணங்களுக்காக இவர்கள் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியினால் வேண்டிய முக்கியத்துவம் கொடுக்கப்படாமல் இருப்பதோடு, ஒதுக்கப்பட்டு, மௌனிகளாகவே நாட்களைக் கடத்தி வருகின்றார்கள்.
என்னைப் போன்ற தமிழர்கள் சிலர், 1968ஆம் ஆண்டிலும்,அதன் பின்னரும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடன் இணைந்து கொண்டவர்கள். இன்னும் தாம் சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள்,என்று பெருமையோடு சொல்லிக்கொள்பவர்கள்.
ஆனால், கட்சித் தலைமை இவர்களைக் கண்டு கொள்ளா மல் இருப்பது கவலைக்குரிய விடயமாகும்.
அது மாத்திரமல்லாமல், நாட்டுக்குச் சேவையாற்றும் விதத்தில் கட்சியில் இவர்கள் தகைமைக்கு பொருந்தும் வகையில் ஒரு பொறுப்பையும் கொடுக்க மேலிடம் தயாராக இல்லை என்பது தெரிந்த விடயமே.
இங்கே கட்சியின் கடந்த கால சரித்திரத்தை நினைவு கூர்வது அவசியமாகின்றது.
1947 ஆம் ஆண்டு இடம்பெற்ற முதல் இலங்கைத் தேர்தலின் பின்னர், தமிழர்கள் லங்கா சமசமாஜக் கட்சி இலங்கை கம்யூனிஸக் கட்சி போன்ற இடதுசாரிக் கட்சிகளில் இணைந்து கொண்டார்கள்.
சோவியத் ஒன்றியத்தில் இடம்பெற்ற ஒக்டோபர் புரட்சியின் தாக்கம் இதுவாகும். 1956 இல் இடம்பெற்ற நாடாளு மன்றத் தேர்தலில், கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளராக பருத்தித்துறை தொகுதியில் போட்டியிட்ட திரு.பி. கந்தையா வெற்றி பெற்றார்.
இதற்கு முன்னர் 1952 இல் இடம்பெற்ற தேர்தலில் திரு.எஸ். நடேசன், ஐக்கிய தேசியக் கட்சியைப் பிரநிதித்துவப்படுத்தி திரு.எஸ்.ஜே.வி. செல்வநாயத்திற்கு எதிராகத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றியையும் ஈட்டினார். இலங்கைத் தமிழரசுக் கட்சியின் ஸ்தாபகர் திரு.செல்வநாயகம் என்பதை இங்கே கவனிக்க வேண்டும்.
1960 மார்ச் மற்றும் ஏப்ரலில் இடம்பெற்ற தேர்தல்களில், அகில இலங்கைத் தமிழ் காங்கிரஸ் தலைவராக இருந்த திரு.ஜி.ஜி. பொன்னம்பலத்திற்கு எதிராகப் போட்டியிட்ட திரு.அல்பிரட் துரையப்பா இரு முறையும் அமோக வெற்றியீட்டினார்.
எழுபதுகளில், பல தமிழர்களுக்கு நேரடியாகவே எதிர்ப்பை தமிழ்த் தேசியவாதிகள் காண்பிக்கத் தலைப்பட்டபோது, தேசிய அளவில் உள்ள கட்சிகளின் ஆதரவைத் தேடும் பணியில் இந்தக் குழு தீவிரம் காட்டத் தொடங்கியிருந்தது. பிரதமர் திருமதி ஸ்ரீமா பண்டாரநாயக்காவின் ஆட்சிக் காலத்தில், திரு.எம்.சி.சுப்பிரமணியம் என்பவருக்கு கட்சியின் நியமன நாடாளுமன்ற அங்கத்துவம் வழங்கப்பட்டதும், செனட்சபை அங்கத்தவராக திரு.செ.குமாரசூரியர் நியமிக்கப்பட்டமை தமிழர்களின் தேசியக் கொள்கைகளுக்கு அன்று கிடைத்த வெற்றி என்றே குறிப்பிட்டுக் கொள்ள வேண்டும்.
அது இலங்கை தேசியத்தின் மீது பற்றுக் கொண்டிருந்த தமிழர்கள் நிலையைப் வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றது.
பிரதமர் ஸ்ரீமா பண்டாரநாயக்க திரு செ. குமாரசூரியருக்கு ஒரு மந்திரிப் பதவியையும் அளித்திருந்தார். செனட் சபை கலைத்ததையடுத்து, நாடாளுமன்ற உறுப்பினராக திரு. செ. குமாரசூரியரை அவர் மீண்டும் நியமித்தார்.
பல தமிழர்கள் மனதில், ஸ்ரீமா பண்டாரநாயக்க இடம்பெற்று விட்டார். பல நூற்றுக்கணக்கான தமிழர்கள் சுதந்திரக் கட்சியில் இணைந்து கொண்டார்கள். 1970-77 காலகட்டத்தில் சுதந்திரக் கட்சி, வடக்கிலும், கிழக்கிலும் இருந்த தமிழர்களின் திறமையை இனங்கண்டு கொண்டது. இந்தக்கால கட்டத்தில் இந்தக் கட்சி உறுப்பினர்களாக இருந்த தமிழர்களுக்கு அரசியல் ரீதியில் இது ஒரு உச்சக் கட்டகாலம் என்றே சொல்ல வேண்டும். கட்சி அவர்களின் திறமையை அங்கீகரித்து பொறுப்புக்களை வழங்கியிருந்தது.
ஆனால், இலங்கைத் தமிழரசுக் கட்சி இவர்களைத் ‘துரோகிகள்’ என்றே அப்பொழுது அடையாளப்படுத்தியது.
சுதந்திரக் கட்சியில் சேர்ந்த தமிழர்களுக்கு எதிராக எதிர்ப்பைக் காண்பிக்க தமிழரசுக் கட்சி தவறவில்லை.
குறிப்பாக யாழ்ப்பாணத்தில் சுதந்திரக் கட்சி அமைப்பாளராகச் செயற்பட்ட திரு.அல்பிரட் துரையப்பா கடும் எதிர்ப்பைச் சந்தித்தார். கொல்லப்பட்டார்.
இன்னொரு சுதந்திரக் கட்சி அமைப்பாளரான திரு. குமாரசாமி விநோதன் 1995 ஆம் ஆண்டு ஏப்ரல் 25 இல் கொல்லப்பட்டார். இந்த இருவரைப் போலவே பல தமிழர்கள் தமது உயிர்களைப் பலிகொடுத்தனர்.
இவர்களின் உயிரிழப்புகளுக்கு இலங்கைத் தமிழரசுக் கட்சியே நேரடியாகவும் மறைமுகமாகவும் காரணமாகும். தாங்கள் தமிழ் மக்கள் மத்தியில் செல்வாக்கு பெறவேண்டும். நாடாளுமன்ற உறுப்பினர் பதவி பெற வேண்டும் என்பதற்காக பொய்ப்பிரச்சாரங்களை எல்லாம் கட்டவிழ்த்து விட்டார்கள். மேலும் கொலைகளுக்கும் காரணமாக இருந்தார்கள்.
ஏன் இவர்கள் கொல்லப்பட்டார்கள்? ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இணைந்தமைதான் காரணம்!
துரதிஷ்டவசமாக, அன்று கொல்லப்பட்டவர்களுக்கோ, இன்றுவரை வடக்கிலும் கிழக்கிலும் கட்சி விசுவாசிகளாக இருப்பவர்களுக்கோ, கட்சி அவர்களின் இறப்புக்காக அனுதாபம் தெரிவிக்கவும் இல்லை. அவர்களின் நினைவை போற்றும் வகையில், எந்த நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவுமில்லை.
தமிழீழ விடுதலைப் புலிகள் இருந்த காலத்தில், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இணைந்து கொண்டவர்கள் தம்மை, ‘சாத்தானுக்கும், ஆழ் சமுத்திரத்திற்கும் இடையில் சிக்கியவர்களாகவே’ என்று எண்ணி, அச்சத்துடன் வாழ்ந்தார்கள்.
ஒரு பக்கம் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் திரு.பிரபாகரன் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்களை ஈவிரக்கமற்ற முறையில் வேட்டையாடினார். மறுபக்கம் கொழும்பில் இயங்கி வரும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, தமிழ் பகுதிகளில் கட்சியின் தமிழ் உறுப்பினர்களுக்கு ஏற்பட்ட உயிராபத்துகளையும் அச்சுறுத்தல்களையும் கண்டு கொள்ளாமலே இருந்து விட்டது.
வடபகுதியில் நிலவிய யதார்த்த நிலையை அறிந்து, அங்குள்ள தம் கட்சி உறுப்பினர்களை அனுசரிக்க கட்சியின் தலைமை தவறிவிட்டதென்றால் அது தான் உண்மை.
அன்று சுதந்திரக் கட்சியின் தலைவராக இருந்த திரு. மஹிந்த ராஜபக்ஷாவின் அரசு, தமிழர்கள் அனைவரை யுமே ‘புலிகள்,’ என்று முடிவு செய்து, அநியாயமாக வேட்டையாடிற்று. துன்புறுத்திற்று. தமிழர்களை சொல்லணா துன்பங்களுக்கு ஆளாக்கிற்று. இருந்த போதிலும், நீண்டகால சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் எந்த சந்தர்;ப்பத்திலும் தாங்கள் சுதந்திரக் கட்சியினர் என்பதை துணிந்து கூறிக்கொண்டேயிருந்தார்கள்.
திரு. வேலுப்பி;ள்ளை பிரபாகரன், என்னை வேட்டையாட தொடங்கிய போது, நான் இந்தியாவுக்கு ஓடினேன். அங்கே வைத்து, இன்று புளொட் அமைப்புக்கு தலைவராக இருக்கும் திரு.தர்மலிங்கம் சித்தார்த்தனின் கோஷ்டியினர் என்னைக் கடத்தினார்கள். அதன் பின்னர், இந்தியா ரூபா இரண்டு லட்சத்து ஐம்பதினாயிரம் என் குடும்பத்திடம் பெற்றுக் கொண்டே என்னை விடுவித்தார்கள். சுதந்திரக் கட்சியின் உறுப்பினர் என்ற ஒரே காரணத்திற்காக புலிகளின் தாக்குதல்களி;ல் இருந்து தப்பிக் கொள்ள நான் உலகம் முழுவதும் ஓடிச் சென்றேன். எங்கு சென்ற போதிலும் நான் சுதந்திரக் கட்சியின் உறுப்பினர் என்றே பெருமைப்பட்டு கூறிக்கொள்வேன்.
யுத்தம் முடிந்த பின்னர் 2010 ஏப்பிரல் மாதம் நடந்த பொதுத் தேர்தலில், சுதந்திரக் கட்சியின் கூட்டணிக் கட்சியான மக்கள் ஐக்கிய சுதந்திரக் கூட்டணி வடக்கில் ஐந்து தொகுதிகளை – வன்னியில் இரண்டும், யாழ்ப்பாணத்தில் மூன்றிலும்; வென்றது. இந்தக் காலகட்டத்தில் திரு.டக்ளஸ் தேவானந்தாவும், ஜனாப் றிஸாட் பதியுதீனும் தான் வடபகுதியில் அரசியல் செல்வாக்கு மிக்கவர்களாக மிளிர்ந்தார்கள்.
இவர்கள் இருவருமே , மக்கள் ஐக்கிய சுதந்திரக் கூட்டணி சார்பாக வெற்றிலைச் சின்னத்தில் போட்டியிட்டு, வென்றவர்கள். வன்னியிலிருந்து ஜனாப் றிஸாட் பதியுர்தீனும், யாழ்ப்பாணத்திலிருந்து திரு.டக்ளஸ் தேவானந்தாவும் திரு. மஹிந்த ராஜபக்ஷா எதிர்பார்த்ததைப் போல தமிழ் மக்களை பிரதிநிதித்துவப் படுத்த தவறிவிட்டார்கள் .
ஆனால்,இரண்டு தடவைகள் ஆட்சிக்கு வந்த திரு.மகிந்த ராஜபக்ஷா இந்த இருவர் மூலமாகவே தமிழர்களை அணுகினார். டக்ளஸ் – றிஸாட் கூட்டை முழுக்க முழுக்க நம்பிய இவர், சுதந்திரக் கட்சியிலிருந்த தமிழ் உறுப்பினர்களையோ அல்லது வட பகுதி தமிழர்களையோ அடியோடு நம்ப முன்வரவில்லை.
இந்த அணுகுமுறையால், தமிழர்கள் மனங்களை திரு. மகிந்த ராஜபக்ஷாவால் வென்றெடுக்க முடியவில்லை. தான் ஒர் சிங்களவர் என்ற ரீதியிலான இவரது அணுகுமுறை இருந்தது. இவர் ஒரு சிங்களத் தலைவரே அன்றி,தேசியத் தலைவரல்ல என்ற தோற்றத்தை சந்தேகமின்றி ஏற்படுத்தியிருந்தது.

யாழ்ப்பாணத்தில் சுதந்திரக் கட்சி சந்தித்த பின்னடைவு களுக்கு பொறுப்பு அந்தக் கட்சியேதான். சுதந்திரக் கட்சியை என்றுமே என் போன்ற ஆயிரக்கணக்கான தமிழ் மக்கள் புறக்கணிக்கவில்லை. இதனை 2015 ஆம் ஆண்டு வன்னி மாவட்டத்தில் போட்டியிட்ட ஜனாப் காதர் மஸ்தான் சுதந்திரக் கட்சி வேட்பாளராக நின்று தேர்தலில் வென்றது, தெளிவாக எடுத்துக் காட்டுகின்றது.

இன்றுவரையில், சுதந்திரக் கட்சி வட மகாண அரசியல் அரங்கில் கணிசமான அளவு இடத்தைப் பிடித்துள்ளது. ஒரு நாடாளுமன்ற உறுப்பினரையும் வட மாகாண சபை யில் ஓர் தமிழ் உறுப்பினரையும், ஓர் சிங்கள உறுப்பினரையும், கொண்டுள்ளது.
இந்த அனுகூலத்தை வைத்துக் கொண்டு, உயர் மட்டம் கடுமையாக உழைத்து, மேலும் பல அனுகூலங்களை ஈட்டியிருக்க வேண்டும். ஆனால் 2015 ஆம் ஆண்டு வரை கட்சி எதுவுமே செய்யாதிருப்பது கவலைக்குரியதாக இருக்கின்றது. வடக்கிலுள்ள சுதந்திரக் கட்சி உறுப்பினர்களை, கட்சியின் தலைமைப்பீடம் அங்கீகரிப்பதாகவே தெரியவில்லை.
சுதந்திரக் கட்சிக்காக பெரிதாகத் தம்மை அர்ப்பணித்த வர்கள் உட்பட பல தமிழர்களை தப்பான கண்ணோட்டத் துடன் தான் நினைத்தார்கள் என்று கருத வேண்டி யுள்ளது.
இக் கட்சியின் ஸ்தாபகரான திரு. பண்டாரநாயக்காவின் கொலை 1958 இல் நடந்த பின்பு, இக்கட்சி நிறையத் தூரத்தை இன்று கடந்து வந்துவிட்டது.
1970-1977 காலகட்டத்தில், மாத்திரம் திருமதி ஸ்ரீமாவின் இரண்டாவது ஆட்சியில், வடக்கிலிருந்த தமிழ் சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் ஓரளவு கவனிக்கப்பட்டுள்ளார்கள். இதற்கு முன்போ , அல்லது பின்போ, தமிழ் சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் வெறுமனே தவிர்க்கப்பட்டு , ஒதுக்கப்பட்டு அரசியல் அனாதைகளாக கைவிடப்பட்டுள்ளார்கள்.

அப்படியானால் இனி என்னதான் இவர்கள் நிலை?;

ஆனால், தற்போதைய சுதந்திரக் கட்சித் தலைமை
இன்றைய சுதந்திரக் கட்சியின் தமிழ் உறுப்பினர்களை அங்கீகரிக்குமா? சென்ற நாடாளுமன்ற தேர்தலையடுத்து சுதந்திரக் கட்சியின் தலைவரும் ஜனாதிபதியுமான திரு மைத்திரிபால சிறிசேன திரு. அங்கஜன் இராமநாதனை கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினராக நியமித்தார். இந்த நியமனம் மூலம் தமி;ழ் மக்கள் ஏதாவது அரசியல் லாபத்தை கண்டார்களா? பெரிதாக குறிப்பிட்டு கூற முடியாமல் இருக்கின்றது.
ஆனால், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் ஜனாதிபதி திரு.மைத்திரிபால சிறிசேன, தமிழ் மக்களை அணைத்துக் கொண்டு போக வேண்டும் என்று கருதுகின்றார். அதே போல் கட்சியின் செயலாளர் நாயகம் திரு.துமிந்த டிஸநாயக்க வடபகுதியில் உள்ள தமிழ் மக்கள் மத்தியில் கட்சியை வளர்க்க வேண்டும் என்று தீவிரம் காட்டி வருகின்றார். அவர் மாத்திரம் இன்றி, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் செயலாளர் நாயகமான திரு.மகிந்த அமரவீரவும் வடபகுதியில் உள்ள தமிழர்கள் மத்தியில் கட்சியை வளர்ப்பதில் அக்கறை காட்டி வருகிறார். இவர்களின் முயற்சிகள் பலிக்க வேண்டும். தேசியத்தை வளர்க்கவும், தேசியத்தின் சங்கமமாகவும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி இருக்க வேண்டும் என்பது தான் கட்சி உறுப்பினர்களின் கருத்தாகும்.
தேசியத்தை வளர்க்க முயற்சிப்போம். வெல்வோம்.
இது முடிவல்ல
-தினச்செய்தி-

Leave a Reply

You must be Logged in to post comment.

© 2017 Thinacheithi | தினச்செய்தி · Subscribe: RSS Twitter · WordPress Theme designed by Speed IT net